
தித்திக்கும் சர்க்கரை பொங்கல்
நாம் வீட்டில் எப்படி பார்த்து பார்த்து செய்தாலும் கோயிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலின் ருசி வருவதில்லை. உங்களுக்கும் கோவில் பிரசாதம் டேஸ்ட்டில் சர்க்கரை பொங்கல் செய்ய வேண்டுமா.. அப்ப இந்த முறையில் செய்து பாருங்கள்.
பொங்கல் என்றால் யாருக்குதான் பிடிக்காது. அதிலும் பலருக்கும் கோயிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கல் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் நாம் வீட்டில் எப்படி பார்த்து பார்த்து செய்தாலும் கோயிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலின் ருசி வருவதில்லை. உங்களுக்கும் கோவில் பிரசாதம் டேஸ்ட்டில் சர்க்கரை பொங்கல் செய்ய வேண்டுமா.. அப்ப இந்த முறையில் செய்து பாருங்கள். ருசி அட்டகாசமாக இருக்கும்.. எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1/4 கிலோ
பாசிப்பருப்பு – 1/2 கப்
வெல்லம் – 500 கிராம்
நெய் – 1/2 கப்
உப்பு – 1 பிஞ்ச்
முந்திரிபருப்பு – 50 கிராம்
உலர் திராட்சை – 25 கிராம்
ஏலக்காய் – 4
தேங்காய் – 100 கிராம்
சர்க்கரை பொங்கல் செய்முறை
முதலில் கால் கிலோ அளவு பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்றாக கழுவி குக்கரில் சேர்க்க வேண்டும். அதில் 5 கப் அளவு தண்ணீர் விட்டு 5 விசில் வைத்து கொள்ள வேண்டும். ( பாசிப்பருப்பு சேர்க்க விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.)
வெல்லத்தை தட்டி ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். அதில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வைக்க வேண்டும். வெல்லம் முழுவதையும் கரைத்து எடுத்து கொள்ள வேண்டும்
குக்கரை திறந்து சாதத்தை நன்றாக மசித்து விட வேண்டும். நன்றாக மசித்தால் தான் பொங்கல் ருசியா வரும். அதில் ஒரு பிஞ்ச் அளவு உப்பை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் அதில் காய்ச்சிய வெல்ல பாகை வடிகட்டி சேர்க்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பொங்கலை நன்றாக கலந்து விட வேண்டும். சிறிது நேரத்தில் வெல்லப்பாகுடன் பொங்கல் பதத்திற்கு வரும் வரை நன்றாக கலந்து விட வேண்டும். அதில் அரை கப் நெய் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பொங்கல் இளக்கமாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து அதில் முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதே நெய்யில் தேங்காயை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வரும் வரை கலந்து விட வேண்டும். தேங்காயை துருவியும் வறுத்து சேர்க்கலாம்.
பின்னர் தேங்காய், முந்திரி பருப்பு, உலர் திராட்சையை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இந்த நேரத்தில் 4 ஏலக்காயை நன்றாக தட்டி பொங்கலில் சேர்க்க வேண்டும். (நீங்கள் விரும்பினால் பொங்கலில் பச்சை கற்பூரத்தை சிறதளவு சேர்க்கலாம். அதிகமாக சேர்த்து விட்டால் அதன் ருசி கெட்டு விடும்.)
தேவையென்றால் இப்போதும் கூட சிறிது நெய் சேர்க்கலாம். இதையடுத்து பொங்கலை நன்றாக கலந்து விட்டு 10 நிமிடம் வரை மூடி வைக்க வேண்டும். பின்னர் பொங்கலை எடுத்து சூடாக பரிமாறலாம். ருசி அட்டகாசமாக இருக்கும்.