
விதிமீறலால் தக் லைஃப் படத்திற்கு அபராதமா?
நடிகர் கமல் ஹாசனின் தக் லைஃப் படத்தை திரையரங்கில் வெளியான சில நாட்களிலேயே ஓடிடியில் வெளியிட திட்டமிட்டு வருவதாக செய்தி வெளியாகும் நிலையில், இந்தப் படத்திற்கு அபராதம் விதிக்க நேரலாம் எனக் கூறப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்தத் திரைப்படத்தில் 30 வருடங்களுக்கு பின் அவர் கமல்ஹாசனுடன் கூட்டணி சேர்ந்து இயக்கியதும், படத்தின் பாடல்களும் மேலும் எதிர்பார்ப்பை கூட்டின. ஆனால், ‘தக் லைஃப்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றத்தை அளித்தது. ஜூன் 5 ஆம் தேதி வெளியான இந்தப் படம், வெறும் மூன்று வாரங்களில் நாடு முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன.
தக் லைஃப் படத்திற்கு அபராதமா?
அத்தோடு, திரையரங்குகளில் வெளியான பிறகு 8 வார இடைவெளியை பின்பற்றாமல் ஓடிடியில் வெளியிட முயற்சிப்பதால், ‘தக் லைஃப்’ படக்குழு அபராதம் செலுத்த வேண்டியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து ஏராளமான கருத்துகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
பிங்க்வில்லா செய்தியின்படி, ‘தக் லைஃப்’ படத்தை முன்கூட்டியே ஓடிடியில் வெளியிடுவதற்காக மல்டிபிளக்ஸ்கள் அபராதம் விதிக்க உள்ளன. படம் பாக்ஸ் ஆபிஸில் சரியாக ஓடாததால், நெட்ஃபிளிக்ஸ் ‘தக் லைஃப்’ ஓடிடி கொள்முதல் விலையை குறைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் விலையை குறைத்த நெட்பிளிக்ஸ்
அந்த பொழுதுபோக்கு வலைத்தளத்திற்கு கிடைத்த தகவலின்படி, “தக் லைஃப் வெறும் 4 வாரங்களில் நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாக உள்ளது. படம் வெளியாவதற்கு முன்பு அதன் விலை ரூ. 130 கோடியாக இருந்தது. ஆனால், படம் பெரிதாக ஓடாததால், விலையை ரூ. 90 கோடியாக குறைக்க நெட்ஃபிளிக்ஸ் பேச்சுவார்த்தை நடத்தியது.
இறுதியில், டிஜிட்டல் உரிமைகளுக்காக ரூ. 110 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனால் ஓடிடி வெளியீட்டு காலக்கெடு 8 வாரங்களில் இருந்து 4 வாரங்களாக குறைந்துள்ளது.” இந்த முடிவின் காரணமாக தக் லைஃப் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வட இந்தியாவில் உள்ள தேசிய மல்டிபிளக்ஸ் சங்கங்களுடன் செய்த ஒப்பந்தம் மீறப்பட்டது.
விதி மீறலா?
“வட இந்தியாவில் திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு 8 வார இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற விதி உள்ளது. தக் லைஃப் இந்த வழிகாட்டுதல்களை மீறியதால், தேசிய மல்டிபிளக்ஸ் சங்கங்கள் தயாரிப்பாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளன. இது ஒரு சின்ன தொகைதான் எனக் கூறப்படுகிறது.
இதில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஹிந்தி பதிப்பில் இருந்து தங்கள் திரையரங்க பங்கை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். இந்த தொகை சுமார் ரூ. 25 லட்சமாக இருக்கும்” என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன என அந்த செய்தி கூறுகிறது.
தக் லைஃப் திரைப்படம்
தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி கன்னடம் தவிர தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, இந்தி பேசும் மாநிலங்களில் வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, கமல் தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது எனக் கூறிய கருத்தால் படம் அங்கு வெளியிட தடை நீடித்தது. பின், நீதிமன்ற உத்தரவுக்குப் பின் படம் வெளியானது. இந்தப் படத்தில் கமலுடன் சிம்பு, அசோக் செல்வன், நாசர், திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் போன்றோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.