
உடல் எடையை அதிகரிக்குமா உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பது உண்மையல்ல! என்று எடை இழப்பு நிபுணரும், ஊட்டச்சத்து நிபுணருமான ஸ்வேதா சப்ரா கொடுக்கும் டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
எடை இழக்க நீங்கள் சிரமப்படுகிறீர்களா? இருப்பினும், உங்களுக்குத் தெரியாத சில உணவுகள் குறித்து உங்களுக்கு சில தவறான கருத்துக்கள் இருக்கலாம். அவற்றை ஒதுக்கி வைக்க வேண்டிய நேரம் இது. “உருளைக்கிழங்கு சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும் என்பது உண்மையல்ல” என்று எடை இழப்பு நிபுணரும் ஊட்டச்சத்து நிபுணருமான ஸ்வேதா சாப்ரா கூறுகிறார். நாம் கெட்டவை என்று நினைக்கும் சில உணவுகள் உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று அவர் கூறுகிறார். பலருக்கு உணவு பற்றி பல தவறான கருத்துக்கள் உள்ளன.
ஆனால், ஜூன் 8 அன்று இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில், நாம் அவற்றை மிதமாக சாப்பிட்டால், நெய், உருளைக்கிழங்கு, மாம்பழம் மற்றும் வெள்ளை அரிசி ஆகியவற்றை நமது தினசரி சீரான உணவில் சேர்க்கலாம் என்று ஸ்வேதா சாப்ரா மிக விரிவாக விளக்கினார். “நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்!” “நீங்கள் கெட்டது என்று நினைக்கும் உணவுகள் உண்மையில் கெட்டவை அல்ல உங்களுக்கு தவறான தகவல்கள் மட்டுமே கிடைத்தன” என்று குறிப்பிட்டுள்ளார்.
“டயட் பெயரில் வரும் வதந்திகளை நம்பாதீர்கள். உண்மையில், இந்த உணவுகள் எப்போதும் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை அல்ல. இனிமேல் இந்த தவறான எண்ணங்களை அனைத்தையும் ஒதுக்கித் தள்ளி… சாப்பிடும் உணவைப் பார்த்து பயப்படுவதை நிறுத்தி, அதை சரியாகப் புரிந்து கொள்ள ஆரம்பியுங்கள்.” என்று குறிப்பிட்டார். ஆரோக்கியத்திற்கு நல்லது செய்யும் 5 ‘ரகசியமான’ உணவுகள் குறித்து ஸ்வேதா கூறியதாவது:
நெய்
பலர் நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று பயப்படுகிறார்கள். ஆனால், நெய் நம் செரிமானத்தை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. அதோடு, இதில் ஏ, டி, ஈ, கே போன்ற கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. எப்படி பயன்படுத்துவது: “ஒரு தேக்கரண்டி நெய்யை தினமும் சமையலில் பயன்படுத்தலாம். இல்லையென்றால், சூடான சாதத்தில் அல்லது சாம்பாரில் சேர்த்து சாப்பிட்டால் சுவையாகவும், ஊட்டச்சத்துடனும் இருக்கும்” என்று ஸ்வேதா ஆலோசனை கூறினார்.
முட்டை (மஞ்சள் கருவுடன் சேர்த்து)
“முட்டையின் மஞ்சள் கருவைப் பற்றி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதில் கொலின், வைட்டமின் டி, பி12, மற்றும் நம் மூளைக்கும், ஹார்மோன்களுக்கும் மிகவும் முக்கியமான ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன” என்று ஸ்வேதா தெளிவுபடுத்தினார். பயன் படுத்தும் முறை: “முழுமையான ஊட்டச்சத்துள்ள உணவுக்காக 1-2 முட்டைகளை காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுங்கள்” என்று அவர் பரிந்துரைத்தார்.
மாம்பழம்
மாம்பழத்தில் இயற்கை சர்க்கரை அதிகம் இருக்கிறது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், இதில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, மற்றும் செரிமானத்திற்கு உதவும் நொதிகள் நிறைந்துள்ளன. மாம்பழம் உண்மையில் நம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்று ஸ்வேதா தெரிவித்தார்.
சிறிய குறிப்பு: “மாலைக்குள் ஒரு சிறிய மாம்பழம் சாப்பிடுவது நல்லது. உணவுக்குப் பிறகு அல்லது மாலை சிற்றுண்டியாக சாப்பிட்டால் மிகவும் நல்லது” என்று அவர் கூறினார்.
வெள்ளை அரிசி
அரிசி சாப்பிட்டால் ‘உடல் எடை அதிகரிக்கும்’ என்று பலர் தவறாக நினைக்கிறார்கள் என்று ஸ்வேதா கூறினார். “அரிசி என்பது குளுட்டன் இல்லாத, எளிதில் செரிமானமாகும் மாவுச்சத்து. இது நம் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது” என்று அவர் விளக்கினார். புத்திசாலித்தனமாக சாப்பிடுங்கள்: “சமச்சீர் உணவுக்காக அரிசியை பருப்பு, ராஜ்மா அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிடுங்கள். காய்கறிகளை அதிகமாக உட்கொள்ளுங்கள்” என்று அவர் ஆலோசனை கூறினார்.
உருளைக்கிழங்கு
“உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உங்களுக்கு உடல் எடை அதிகரிக்காது. எண்ணெயில் பொரித்த (பிரை செய்து) சாப்பிட்டால் மட்டுமே உடல் எடை அதிகரிக்கும். வேகவைத்த அல்லது சுட்ட உருளைக்கிழங்கில் (தோலை நீக்காமல்) பொட்டாசியம், நார்ச்சத்து, மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன” என்று ஸ்வேதா தெளிவுபடுத்தினார்.
எப்போது சாப்பிட வேண்டும்
ஸ்வேதாவின் கருத்துப்படி, உருளைக்கிழங்கு உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது புரோட்டீனுடன் சேர்த்து முழு உணவாக எடுத்துக் கொள்ள மிகவும் நல்லது. இந்த உணவுகளைப் பற்றிய தவறான கருத்துக்கள் ஏன் வந்தன? இந்த உணவுகளைப் பற்றிய தவறான கருத்துக்கள் உருவாகக் காரணங்களை ஸ்வேதா விளக்கினார். சமூக ஊடகம், தற்காலிக உணவுமுறைகள் (ஃபேட் டயட்டுகள்) மூலம் வரும் தவறான தகவல்கள். அதிகமாக சாப்பிடுவது, சரியாக சமைக்காதது போன்றவற்றுக்கு இயற்கையான உணவுகளை குறை கூறுவது. இயற்கையான உணவுகளுக்கும் (எ.கா: வேகவைத்த உருளைக்கிழங்கு), செயலாக்கப்பட்ட உணவுகளுக்கும் (எ.கா: பிரெஞ்ச் பிரைஸ்) இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாதது.
இந்த உணவுகளை உங்கள் உணவில் எவ்வாறு புத்திசாலித்தனமாக சேர்க்கலாம் என்பதற்கான சில குறிப்புகளையும் அவர் பகிர்ந்து கொண்டார். நெய்யை மிதமாக பயன்படுத்த வேண்டும். அரிசி அல்லது உருளைக்கிழங்கை புரோட்டீனுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இப்படிச் செய்தால் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்காமல் மெதுவாக வெளியிடப்படும். மாம்பழத்தை பகலில் முதல் பகுதியில் சாப்பிடுவது நல்லது. முழுமையான ஊட்டச்சத்துக்காக முட்டையின் வெள்ளைக்கரு மட்டுமல்லாமல், மஞ்சள் கருவுடனும் முழு முட்டையையும் சாப்பிடுங்கள்.