
திராவிடம் வேரூரின்றிய நாளிலிருந்து, தேசிய கட்சிகளுக்கு இடமின்றி, தொடர்ந்து தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் தோன்றியது எப்படி? தமிழ்நாட்டில் திராவிடத்தின் எழுச்சி என்ன? அதை விளக்கும் சிறப்பு கட்டுரை
“தமிழன் என்றோர் இனமுண்டு…
தனியே அவனுக்கோர் குணமுண்டு…”
பாரதியின் இந்த வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் தான் தமிழகத்தின் அரசியல் களம் எப்போதும் இருந்திருக்கிறது.
மற்ற மாநிலங்களில் எல்லாம் தேசியக் கட்சிகளின் தாக்கம் கோலோச்சும் நிலையில் தமிழகத்தில் மட்டும் திராவிட இயக்கங்களின் வழியில் வந்த கட்சிகள் தான் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது. இதற்கு அடித்தளமிட்டது இன்று; நேற்று அல்ல… ஆங்கிலேயர் காலத்திலேயே, திராவிட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசியல் சித்தாந்தத்திற்கு அடித்தளமிட்டது திராவிட இயக்கங்கள் ஆகும்.
ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கிய திராவிடம்
திராவிட இயக்கங்களின் அரசியல் ஆங்கிலேயர்கள் காலத்திலேயே தொடங்கிவிட்டது
1916 நவம்பர் 20 ஆம் தேதி சென்னையில் உள்ள விக்டோரியா மண்டபத்தில் டி.எம். நாயர் மற்றும் பி. தியாகராய செட்டி ஆகியோரால் உருவாக்கப்பட்டது தான் நீதிக்கட்சி.
திராவிட இயக்கங்களின் தொடக்கத்திற்கு அடித்தளமிட்ட நீதிக்கட்சி உருவானதன் பின்னணியை அறிந்து கொள்வது முக்கியம்.
அரசியல் களத்திலும், உயர் பதவிகளிலும் பிராமணர்களின் ஆதிக்கம் மிகுந்த காலகட்டத்தில் பிராமணரல்லாதவர்களுக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி உருவாக்கப்பட்டதே நீதிக்கட்சி ஆகும் . 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மதராஸ் மாகாணத்தில் உள்ள பல்வேறு பதவிகளில் நியமிக்கப்படுவதில் பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதவர்களுக்கும் இடையிலான வகுப்புவாத மோதல்கள் தொடங்கியது.
நீதிக் கட்சி உருவாகக் காரணம்
முக்கியமாக சாதிய பாரபட்சங்கள் மற்றும் அரசாங்க வேலைகளில் விகிதாசாரமற்ற பிராமண பிரதிநிதித்துவம் காரணமாக நீதிக்கட்சியின் அறக்கட்டளை, சென்னை மாகாணத்தில் பிராமணரல்லாதவர்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு அமைப்பை நிறுவுவதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டதன் விளைவாகவே 1916ல் நீதிக் கட்சி உருவாக்கப்பட்டது. தொடர்ந்து பிராமணரல்லாதவர்கள் மாநாடுகள் மற்றும் கூட்டங்களை நடத்தியதன் விளைவாகவே இக்கட்சி உருவாக்கப்பட்டது.
1850ம் ஆண்டுகளில் மொத்த மக்கள் தொகையில் 3.2% மட்டுமே இருந்த பிராமணர்களே கல்வியிலும் அரசு வேலை வாய்ப்புகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்க அவர்களின் ஆங்கில மொழி புலமையும், கல்வியறிவும் முக்கிய காரணமாக இருந்தது.

இதன் காரணமாகவே பிராமணர்க்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கும் இடையே அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்களில் வேறுபாடு அதிகரித்து காணப்பட்டது. போதாக்குறைக்கு 1910 முதல் 1920ம் ஆண்டு வரை மெட்ராஸ் மாகாண ஆளுநரால் நியமனம் செய்யப்பட்ட 9 சட்டமன்ற மேல் சபை உறுப்பினர் (எம்.எல்.சி.)களில் 8 பேர் பிராமணர்கள். நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைத் தவிர, மாவட்ட மற்றும் நகராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிலும் பிராமணர்களின் ஆதிக்கமே பெரும்பான்மையாக இருந்தது.
நீதிக்கட்சியை தொடர்ந்து சுயமரியாதை இயக்கம்
இந்தக் காலகட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் பிராந்தியக் கிளையான மதராஸ் மாகாண காங்கிரஸிலும் பிராமணர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது.
சென்னை மாகாணத்தில் இருந்து வெளிவந்த 11 முக்கிய செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் மதராஸ் மெயில் மற்றும் மதராஸ் டைம்ஸ் ஆகிய 2 ஊடகங்களும் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவான ஐரோப்பியர்களால் நடத்தப்பட்டன. 7 வார மற்றும் தினசரி பத்திரிகைகளும் பிராமணர்களால் நடத்தப்பட்டவை. பிராமணர்கள் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதையும், அவர்களுக்கு சாதகமாக அன்னிபெசன்ட் அம்மையாரால் கொண்டுவரப்பட்ட “ஹோம் ரூல்” இயக்கமும் செயல்படுவதை சுட்டிக்காட்டி பிராமணரல்லாத தலைவர்கள் துண்டுப் பிரசுரங்கள், மனுக்கள் மூலமாக மெட்ராஸ் ஆளுநருக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.

நீதி கட்சியின் தொடர்ச்சியாக 1925ல் பெரியார் ஈவெராவும், அயோத்திதாசும் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். நீதி கட்சியின் ஒரு அங்கமாகவே சுயமரியாதை இயக்கம் இருந்தது. தமிழர், தெலுங்கர்களை உள்ளடக்கிய திராவிடர்கள் பெரும்பான்மையாக இருந்தும் பிராமணர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதை நேரடியாக எதிர்க்கும் வகையில் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் தான் 1944ல் திராவிடர் கழகமாக உருவானது. பின்னாளில் தந்தை பெரியார் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட ஈ.வெ.ராமசாமி தான் தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் வலுவாக கால் ஊன்றுவதற்கு காரணமாக இருந்தார் என்பது வரலாறு.
ஈரோட்டில் பெரியாரால் தொடங்கப்பட்ட ‘குடியரசு’ நாளிதழ், திராவிடர்களின் உரிமையை நிலைநிறுத்தும் வகையிலும், கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்தியும் குடியரசு நாளிதழில் பல்வேறு தலையங்கமும் கட்டுரைகளும் வெளியானது.
அண்ணாவின் எண்ணத்தால் திமுக உருவானது
இந்த குடியரசு நாளிதழில் தான் துணை ஆசிரியர்களாக பேரறிஞர் அண்ணாதுரையும், கலைஞர் கருணாநிதியும் பணியாற்றி பின்னாளில் முதலமைச்சரானது வரலாறு.
ஒரு பக்கம் குடியரசு நாளிதழை நடத்திக் கொண்டு, மறுபுறம் மூடநம்பிக்கை எதிர்ப்பு , பகுத்தறிவு, சுயமரியாதையை ஏற்படுத்தும் வகையில் தொடர் பிரச்சாரங்களில் பெரியார் ஈடுபட்டார். இருப்பினும் பெரியாருக்கு ஆட்சி அதிகாரத்தில் ஈடுபடுவதிலும், தேர்தல் அரசியலில் ஈடுபடுவதிலும் அக்கறை காட்டவில்லை.
ஆனால் கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு பெற வேண்டுமெனில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதில் பேரறிஞர் அண்ணா உறுதியாக நின்றார்.

அதன் வெளிப்பாடாகவே திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறிய அண்ணாதுரை திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கினார். திமுகவை அண்ணாதுரை தொடங்கிய காலத்தில் பெரியார், திமுகவை கடுமையாக எதிர்த்தார். இருப்பினும் பின்னாளில் திமுகவை விமர்சிப்பதை பெரியார் கைவிட்டார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் அல்லாத கட்சி என்ற அடிப்படையில் முதன்முதலாக ஆட்சி அமைத்தது திமுக தான்.
1967 ஆம் ஆண்டு மார்ச் 6ம் தேதி அறுதிபெரும்பான்மையுடன் திமுக சார்பில் போட்டியிட்டு முதலமைச்சராக அண்ணாதுரை பொறுப்பேற்றுக் கொண்டார். புற்று நோயால் பாதிக்கப்பட்டதால் அண்ணாதுரை 1969ல் காலமானதால் தமிழக முதலமைச்சராக கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார்.
‘அண்ணாயிசம்’ கொள்கையில் அதிமுக உருவானது
அண்ணாதுரை வாழ்ந்த காலத்திலேயே தமிழ் திரை உலகில் ஜாம்பவானாக விளங்கிய எம்.ஜி.ஆர். தனது திரைப்படங்களின் கொள்கை பாடல்கள் மூலமாக திமுகவை வளர்த்தெடுப்பதில் மிகப்பெரிய பங்காற்றினார். பிற்காலத்தில் கருணாநிதியை எதிர்த்து திமுகவில் இருந்து வெளியேறிய எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி புதிதாக கட்சியை தொடங்கினார். அறிஞர் அண்ணாவின் சமூக நீதி கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு “அண்ணாயிசம்” என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை சந்தித்தார் எம்ஜிஆர்.

1977ல் நடைபெற்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எம்ஜிஆர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் நடைபெற்ற 2 தேர்தல்களிலும் அவரே வெற்றி பெற்று 1987ம் ஆண்டு வரை 3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக எம்ஜிஆர் இருந்தார். உடல் நலக்குறைவால் எம்ஜிஆர் காலமானதையடுத்து தற்காலிக முதலமைச்சர் ஆக நாவலர் நெடுஞ்செழியனும், அவரைத் தொடர்ந்து எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மையாரும் முதலமைச்சராக சிறிது காலம் மட்டும் இருந்தனர்.
1989ல் மீண்டும் திமுக ஆட்சியை பிடித்தது. இதன் தொடர்ச்சியாக திமுகவில் நடைபெறும் வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்த வைகோ அக்கட்சியில் இருந்து வெளியேறி 1994 ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
முதல்வரானார் ஜெயலலிதா
1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுக்கு பலியானதை தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக- காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தமிழக முதலமைச்சராக முதன்முதலாக ஜெயலலிதா 1991இல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியும், தற்போது மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியே தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. 1967ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மட்டும் திராவிட பேரியக்கத்தின் வழியில் வந்த கட்சிகளே ஆட்சி அமைத்து வருகிறது.

தேசிய அரசியலில் பல்வேறு ஆட்சி மாற்றங்களும், அரசியல் மாற்றங்களும் ஏற்பட்ட நிலையிலும் தமிழகத்தில் மட்டும் திராவிட இயக்கங்களின் வழிவந்த கட்சிகளே ஆட்சி புரிகின்றன என்பது பிற மாநிலங்களால் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.