
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடன், சவுக்கு சங்கர் நடத்திய நேர்காணல்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடன், பிரபல யூடியூப் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் நேர்காணல் எடுத்துள்ளார். பரபரப்பான இந்த சமயத்தில், டாக்டர் ராமதாஸ் பகிர்ந்துள்ள கருத்துக்கள் பரபரப்பு நிறைந்தவையாக உள்ளது. இதோ அந்த பேட்டி:
டாக்டர் ராமதாஸூடன் சவுக்கு சங்கர் எடுத்த நேர்காணலை உங்களுக்காக தொகுத்துள்ளோம். இதோ கேள்வியும் பதிலும்:
சவுக்கு சங்கர்: 50 ஆண்டுகளில் சமூகம் எப்படி மாறியிருக்கிறது?
ராமதாஸ்: நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோம். தமிழ்நாடு என்கிற பெயரை, குடிகார நாடு என்று மாற்ற வேண்டும். அது தான் பொருத்தமாக இருக்கும். மது அனைவருக்கும் கேடு என அரசே சொல்லிவிட்டு, குடிக்கச் சொல்கிறது. இப்போ கஞ்சா வந்துவிட்டது. இப்படி அழிவுப் பாதைக்குப் போனால், தமிழ்நாடு எப்படி இருக்கும்? அந்த காலத்தில் 100 வீடு இருந்தால், ஒரு வீடு தான் குடிகார வீடு. ஆனால், இன்று ஒரு வீடு தான் குடிக்காத வீடாக இருக்கும். குடியில்லாத போது தான் தமிழ்நாட்டில் வளர்ச்சி ஏற்படும். மும்மூர்த்திகள் என்னிடம் வரம் கேட்டால், மது இல்லாத தமிழகம் தான் வேண்டும் என்று கேட்பேன்.
சவுக்கு சங்கர்: பட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய போது, வன்னியர் அல்லாதோரை முக்கிய பொறுப்புகளில் நியமிக்கும் எண்ணம் ஏன் வந்தது?
ராமதாஸ்: ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட ஏமாற்றப்பட்ட சமூகங்கள் மேலும் முன்னேற வேண்டும். அவர்களின் வாழ்நிலை மோசமாக இருந்தது. இன்றும் அப்படி தான் இருக்கிறது. அதனால் தான் அந்த முடிவு எடுத்தோம்
சவுக்கு சங்கர்: பயிலரங்கங்கள் மூலம் நிறைய தலைவர்களை உருவாக்கிய நீங்கள், உங்கள் மகனை நல்ல தலைவராக உருவாக்கவில்லை என்று வருந்துகிறீர்களா?
ராமதாஸ்: ஆமாம், நிச்சயமாக வருந்துகிறேன். ரொம்ப வருத்தம். அரசியல் பயிலரங்கத்தில் அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும், அவர் படம் போட்டிருப்போம். நீ செயல்தலைவரா இரு, நான் தலைவராக இருக்கிறேன் என்று கூறினேன். தலைவராக இல்லை.. ஒரு தொண்டனாக அவர் என்ன சொல்லியிருக்க வேண்டும்? நீங்கள் பாருங்கள், நான் தொகுதிகளை சுற்றி வருகிறேன் என்று அவர் சொல்லியிருக்க வேண்டும்.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசியலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எழுச்சி
சவுக்கு சங்கர்: அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் ஏன் வைக்கிறீர்கள்?
ராமதாஸ்: அவர் தன்னைத் தானே திருத்திக் கொண்டு, இந்த மக்களுக்காக கிராமம் கிராமமாக சென்று உழைக்க வேண்டும். நான் கிராமங்களுக்கு சென்று, அவர்கள் தரும் கஞ்சி, கூலு வாங்கிக் குடித்தேன். அதை விட ஒரு படி மேலே அவர் இருக்க வேண்டும்.
சவுக்கு சங்கர்: என் குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்ற பிரகடனத்தை, உங்கள் மகனுக்காக தளர்த்தி, அவரை மத்திய அமைச்சராக்கினீர்கள். அது தான், இன்று அன்புமணியின் இந்த நிலைக்கு காரணமா?
ராமதாஸ்: ஆமாம், நான் செய்த மிகப்பெரிய தவறு அது தான்.
சவுக்கு சங்கர்: ‘என் தந்தைக்கு புத்தி பேதலித்து விட்டது’ என்று தற்போது அன்புமணி கூறுகிறார்.. அதைப் பற்றி?
ராமதாஸ்: இதுக்கு என்ன பதில் சொல்வது? இப்படி ஒரு பிள்ளையை பெற்றுவிட்டோமே என்ற வருத்தம் ஏற்படத் தான் செய்கிறது
சவுக்கு சங்கர்: 60வது திருமண நாள் ஒரு பாக்கியம். அது அனைவருக்கும் கிடைப்பதில்லை. அந்த திருமண நாளை அன்புமணி புறக்கணிக்கும் அளவுக்கு ஏன் இந்த கோபம்?
ராமதாஸ்: தெரியவில்லை.. நீங்களே அவரிடம் கேளுங்கள். எனக்கு மட்டும் மல்ல, பெற்ற தாய்க்கு எப்படி இருக்கும்? அம்மாவுக்கு போனில் வாழ்த்து தெரிவித்ததாக இன்று தான் கேள்விபட்டேன்.
மேலும் படிக்க | ITR: வரி அறிக்கையை தாக்கல் செய்யப் போறீங்களா? படிவம் 16 மற்றும் படிவம் 26AS இல் பொருந்தாதை அறிய.. சரிசெய்ய.. தகவல் இதோ!
சவுக்கு சங்கர்: நீங்களும், அன்புமணியும் இப்படி விலகி நிற்கும் போது, பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்காலம் என்ன?
ராமதாஸ்: பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்காலம், ஒளிமயமான எதிர்காலம். நான் உயிரோடு இருக்கும் வரை, இப்போது இருக்கும் நிலையை விட பல மடங்கு உயர்த்தி, தேர்தலை சந்திப்போம். பொறுப்புகளை புதியவர்களுக்கு, இளைஞர்களுக்கு வழங்குவேன். இறுதியில் இந்த கட்சியை யாரிடம் தருவேன்? அன்புமணிக்கு தானே? அதுவரை ஏன் என்னிடம் கட்சி இருக்கக் கூடாது? அவர் செயல்பாடு சரியில்லை என்பதால் தான், அவரை செயல் தலைவராக நியமித்தேன். இனியாவது செயல்படு என்று தான், அதற்கு அர்த்தம்.

சவுக்கு சங்கர்: கட்சிக்கு இருவர் உரிமை கொண்டாடும் போது, பிற கட்சிகள் எப்படி கூட்டணி பேசுவார்கள்? யாரிடம் கூட்டணி பேசுவார்கள்?
ராமதாஸ்: என்னிடம் தான் பேச வேண்டும். நான் தான் தலைவர், நிறுவனர் எல்லாமே. என்னிடம் தான் தொகுதி பங்கீடு நடக்கும்.
சவுக்கு சங்கர்: நீங்கள் செதுக்கிய கட்சி, பலவீனப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்?
ராமதாஸ்: ஒரு பிள்ளையைப் பெற்றோம், நல்ல கல்வியை கொடுத்தோம், மத்தியில் ஆட்சியில் அமர்த்தினோம். ஆனால், நல்ல குணங்களை கொடுத்து செதுக்கவில்லையே என்கிற வருத்தம், எனக்குள் ஏற்படுகிறது.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் திராவிடத்தின் எழுச்சி.. நீதிகட்சி முதல்.. திக.. திமுக.. அதிமுக.. மதிமுக.. தேமுதிக.. வரை!
சவுக்கு சங்கர்: பயிலரங்கம் போன்ற கட்சியின் அன்றாட செயல்பாடுகளை அன்புமணி நிறுத்திய போது, நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை?
ராமதாஸ்: இல்லை, கண்டித்தேன்…
சவுக்கு சங்கர்: இப்போது நீங்கள் அதிகம் ஜோக் அடிக்கிறீர்கள்? இந்த நகைச்சுவை உணர்வு எப்படி வந்தது?
ராமதாஸ்: முன்பு என்னை கோபக்காரர் என்பார்கள். நான் திட்டுவேன். ஆனால், திட்டு வாங்கியவர் அங்கிருந்து சென்ற பின், அவருக்கு போன் செய்து சீட் பெல்ட் போட்டிருக்கியா? சாப்பிட்டீயா? என்று கேட்பேன். தைலாபுரத்தில் என்னை பார்க்க எந்த முன்அனுமதியும் தேவையில்லை. மக்களோடு மக்களாக அவர்களின் துன்பங்களை சிறுவயதில் இருந்து புரிந்து கொண்டவன் நான்.
சவுக்கு சங்கர்: கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகளுடன் அரசியல் செய்தவர் நீங்கள். இப்போது அவர்கள் இல்லாத வெற்றிடத்தை உணர்கீர்களா?
ராமதாஸ்: நீங்கள் சொல்லும் போது தான், அதை உணர்கிறேன்.
சவுக்கு சங்கர்: அன்புமணிக்கு நீங்கள் சொல்ல விரும்பும் சேதி என்ன?
ராமதாஸ்: செயல் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு, மக்களை சந்திக்க வேண்டும். ஊர் ஊரா, தெரு தெருவா போய் மக்களை சந்திக்க வேண்டும்.
என்று அந்த நேர்காணலில் டாக்டர் ராமதாஸ் பதிலளித்திருந்தார்.