
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து இரு இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்திய இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், அனைவரையும் வியக்க வைத்தார். இந்த இரு சதத்தின் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு மட்டுமல்லாமல், தனது உண்மையான திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்திய அணி இந்த போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த தோல்வியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனால் பந்த்தின் இந்த சிறப்பான ஆட்டம் வீணானது. தனது அதிரடி பேட்டிங் மற்றும் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு பரவலாக அறியப்பட்ட ரிஷப் பந்த், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில், அவர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில், பந்த் 28.33 சராசரியில் வெறும் 255 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது மொத்த ரன்களில் 24 பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் மட்டுமே அடங்கும். இந்திய அணி இந்த தொடரில், 1-3 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக ஆஸ்திரேலியா தொடரில் மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், பந்த்தின் ஆட்டம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில், மிக மோசமான ஆட்டங்களில் ஒன்றாக மாறியது.
முட்டாள்தனம் என விமர்சனம் செய்த முன்னாள் வீரர்
இந்த போட்டியில் ஒரு ராம் ஷாட் அடிக்க முயற்சித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த போட்டியின் போது வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் இந்திய பேட்டர் சுனில் கவாஸ்கர், பந்த் ஆட்டமிழந்ததை பார்த்து, பந்த்தின் பொறுப்பற்ற அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தார். பந்த் குறித்து அவர் பேசிய “முட்டாள்தனம், முட்டாள்தனம், முட்டாள்தனம்” என்ற வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாக பரவியது.
இது குறித்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வெளியிட்ட ஒரு அறிக்கை, மெல்போர்ன் தனது மோசமான ஆட்டத்திற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்ட பந்த், தீவிர பயிற்சி ஈடுபட முடிவு செய்ததாகத் தெரிவித்தது. இதற்காக அவர், தனது வாட்ஸ்அப்பை நீக்கிவிட்டதாகவும் (அன்இன்சால்), தனது மொபைல் போனையும் அணைத்துவிட்டு (சுவிட்ச்ஆப்), பயிற்சியில் கவனம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் சோஹும் தேசாய், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’விடம் பேசுகையில், “தினமும் மிகத் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்ட பந்த், ஓய்வாக இருக்கும் போதெல்லாம் என்னை ஜிம்மிற்கு இழுத்துச் சென்றார். சோர்வு அல்லது பணிச்சுமை திட்டங்களைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. அவர் தன்னைப் பற்றி தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும் என்று மட்டுமே சொன்னார். இறுதிப் போட்டி அன்று, அவர் ஏதோ ஒரு குற்ற உணர்வுடன் என்னிடம் வந்து, ஒரு நாள் விடுப்பு எடுக்கலாமா என்று கேட்டார். அது சரியான நேரம் என்று நான் சொன்னேன்,” என்று கூறியுள்ளார்.
மேலும், “பந்த்துக்கு நிறைய ஆற்றல் உள்ளது, அவர் அசாதாரணமான எதையும் செய்யாமல் குறைந்தது ஒரு வருடத்திற்கு சிறப்பாக செயல்படுவார். அதனால்தான் டெஸ்டில் இரண்டு சதங்கள் அடித்து, இவ்வளவு நேரம் விக்கெட் கீப்பிங் செய்த பின்னரும் அவர் இவ்வளவு சிறப்பாக செயல்படுவதைக் காண்கிறீர்கள்,” என்று அவர் கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக களமிறங்கிய பந்த், பேட்டிங்கில் சொதப்பினார். ஆனாலும் கடைசி போட்டியில் சதம் அடித்த அவர், அந்த ஃபார்மை அப்படியே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தொடர்ந்து வருகிறார்.