
அஜித்குமார் லாக்கெப் மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்!
Justice for Ajith Kumar: மடப்புரம் கோயில் தற்காலிக பணியாளர் அஜித்குமார், விசாரணையின் போது கொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
Justice for Ajith Kumar: மடப்புரம் கோயில் தற்காலிக பணியாளர் அஜித்குமார் விசாரணை மரணம் தொடர்பாக, அவரை விசாரித்த ஏட்டுகள் கண்ணன், பிரபு, ராஜா, சங்கர மணிகண்டன், ஆனந்த் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு அவர்களை ஏடிஎஸ்பி சுகுமார் தலைமையிலான போலீசார், திருப்புவனம் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து, கைரேகை உள்ளிட்டவைகள் பதிவுகளை ஆவணம் செய்தனர். அதிகாலை 4 மணி வரை ஆவணங்கள் தயார் செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் போது, ஏடிஎஸ்பி சுகுமார், போலீஸ் ஸ்டேசனின் அனைத்து விளக்குகளையும் அணைக்க உத்தரவிட்டார். அதன் பின் ஐந்து பேரையும் இருட்டில் வேனில் ஏற்றி திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன் ஆஜர் செய்தனர். விசாரித்த நீதிபதி, 5 ஏட்டுகளையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும் படிக்க: அஜித்குமார் மரணத்தின் பின்னணியும் அதன் விபரத்தை விளக்கும் வீடியோ தொகுப்பு
இதற்கிடையில், அஜித்குமார் கால்தடுக்கி விழுந்து வலிப்பு நோய் காரணமாக இறந்ததாக போலீசார் கூறும் நிலையில், அவரது பிரதேச பரிசோதனை முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், 18 இடங்களில் வருக்கு காயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Justice for Ajith Kumar: அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காயங்கள்
- வலது கை மூட்டுக்கு மேலே காயம்
- வலது கை மணிக்கட்டுக்கு கீழே சிராய்ப்பு காயம்
- வலது பக்க நெற்றியில் சிராய்ப்பு காயம்
- வலது பக்க கன்னத்தில் சிராய்ப்பு காயம்
- இடது பக்க காதில் ரத்தம் உறைந்த நிலையிலும் வடிந்த நிலையிலும் உள்ளது.
- இடது புஜத்தில் சிராய்ப்பு காயம்
- இடது பக்க தோள்பட்டை முதல் முழங்கை மூட்டு வரை கன்றிய காயம்
- இடது பக்க கை மூட்டில் சிராய்ப்பு காயங்கள் – நான்கு.
- இடது கை மணிக்கட்டுக்கு மேல் பகுதியில் மூன்று சிராய்ப்பு காயங்கள்.
- இடது பக்க விலாவில் கன்றிய காயம்
- இடது கரண்டை காலில் சில சிராய்ப்பு காயம். கை விரல்கள் உட்புறமாக மடங்கி விரைப்பாக காணப்பட்டது
- இடது பக்க முதுகில் விலா பின்புறம் கன்றிய காயம்
- இடது பக்க இடுப்பில் சிராய்ப்பு காயம்
- வலது பக்க பின் முதுகில் சிராய்ப்பு காயம்
- மோசன் போன நிலையில் உள்ளது
- இடது கால் இடது மணிக்கட்டுக்கு மேல் தோல் பிரிந்த காயம்
- இடது கால் பாதத்திற்கு மேல் சிராய்ப்பு காயம்
- வலது பக்க காதில் உள்பக்கமாக ரத்தம் உறைந்த நிலையில் காணப்பட்டது

Justice for Ajith Kumar: சம்பவத்தின் தொடக்கமும்.. தற்போது வரையும்..
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி அஜித்குமார் (30) உயிரிழந்த சம்பவத்தில், குற்றப்பிரிவு போலீசார் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. ஜூன் 27ம் தேதி வெள்ளிகிழமை காலை 9.30 மணிக்கு, அங்கு காரில் வந்த மருத்துவர் நிக்கி என்பவர், நடக்க முடியாத தன் தாயை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றுள்ளார். முன்னதாக, காரை பார்க் செய்ய, அங்கிருந்த கோயில் பணியாளர் அஜித்திடம் உதவி கேட்டுள்ளார். அவரும் உதவி செய்து தர, தரிசனம் முடித்து வந்த நிக்கி, காரை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது, காரில் இருந்த பைகள் கலைந்திருப்பதை பார்க்கிறார்.
மேலும் படிக்க: கொண்டைக்கடலை வெந்து கொண்டிருந்த பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை பலி!
அதன் பின் சோதனை செய்த போது, உள்ளே இருந்த நகை மாயமானது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக, அஜித்குமார் மீது மதியம் 2 மணியளவில் நிக்கி புகார் அளித்தார். இதைத் தொடர்ந்த அழைத்து வரப்பட்ட அஜித்குமாரிடம், போலீசார் முறையான விசாரணை நடத்தவில்லை. புகார் ரசீதும் பதியப்படவில்லை. பெண் டாக்டர், தொடர்ந்து அழுத்தம் தர, இரவு 9 மணிக்கு புகார் ரசீது வழக்கப்பட்டுள்ளது. மறுநாள் காலை ஜூன் 28 ம் தேதி, மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு ஏட்டு கண்ணன் தலைமையில் ஏட்டுகள் ராஜா, சங்கரமணிகண்டன், ஆனந்த், பிரபு ஆகியோர் அஜித்குமாரிடம் விசாரித்த போது, தனக்கு கார் ஓட்ட தெரியாததால் நண்பர் அருண் காரை இயக்கியதாக கூறியுள்ளார். அருணை பிடித்து விசாரித்த போது தனக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டார்.
Justice for Ajith Kumar: போலீஸ் தரப்பில் கூறப்படும் சம்பவத்தின் பின்னணி
அடுத்தடுத்த விசாரணையில் அஜித்குமார், தனது தம்பி நவீன்குமாரிடம் கொடுத்ததாக கூறவே அவரையும் அழைத்து விசாரித்தனர். அவரும் மறுத்து விடவே அஜித்குமார் நகையை கோயில் பின்புறம் உள்ள கோசாலையில் வைத்திருப்பதாக கூறியதாகவும், இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு டெம்போ வேனில் அவரை அழைத்து சென்று தேடியுள்ளனர். அப்போது அஜித்குமார் தப்பி ஓடும்போது தவறி விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, திருப்புவனம் மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதன் பின் மதுரை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அஜித்குமார் இறந்த தகவல் பரவியதும் உறவினர்கள் 28ம் தேதி நள்ளிரவு வரை திருப்புவனம் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதனையடுத்து குற்றப்பிரிவு போலீசார் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன், ஓட்டுனர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட எஸ்பி ஆஷிஷ்ராவத் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம், பயங்கர கொந்தளிப்பை ஏற்படுத்த, ஜூன் 29ம் தேதி காலை மடப்புரத்தில் கடைகள் அடைத்து போராட்டம் நடத்தப்பட்டது. சம்மந்தப்பட்ட 6 போலீசாரையும் கைது செய்ய வலியுறுத்தி, அஜித்குமார் உடலை வாங்க மறுத்தனர்.
திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தலைமையிலான திமுகவினர், அவர்களை சமாதானம் செய்து மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெறும் இடத்திற்கு காரில் அழைத்துச் செல்ல முயன்றனர்.
சம்பவ இடத்தில் இருந்த அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையிலான அதிமுகவினர், காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸ் வேனில் அஜித்குமார் குடும்பத்தினரை அழைத்துச் சென்று உடல் பிரேத பரிசோதனை செய்து, உடல் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரத்தை, அதிமுக தீவிரமாக கையில் எடுத்தது, குறிப்பாக ‘ஜஸ்டிஸ் ஃபார் அஜித்குமார்’ என்று ஹேஸ்டேக் நேற்று டிரெண்டிங் ஆனது.