
ரோஜா பூ டீ அல்லது ரோஜா பூ ஷர்பத் குடிப்பதால் கிடைக்கும் சில நன்மைகள்
ரோஜா பூ டீ அல்லது ரோஜா பூ ஷர்பத் குடிப்பதால் கிடைக்கும் சில நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம். உடலில் ஏற்படும் வெப்பத்தைக் குறைக்கிறது.
கோடை வெயிலில் நீர்ச்சத்தை தக்கவைத்து கொள்ளவும், சருமத்தைப் பாதுகாக்கவும் நீங்கள் பலவிதமான பானங்களை அருந்துகிறீர்கள். அவற்றுடன் சேர்த்து உங்கள் உணவில் ரோஜா பூ ஷர்பத் அல்லது ரோஜா பூ டீயையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பாரம்பரிய பானங்களில் ஒன்றான இந்த ரோஜா பூ பானங்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும். உடல் நீர்ச்சத்து நிறைந்திருக்க உதவும்.
அது மட்டுமல்ல பெண்களை அதிகம் பாதிக்கும் மாதவிடாய் பிரச்சனைகள், அதிக எடையைக் குறைக்கவும் இது உதவும். மாதவிடாய் காலத்தில் ரோஜா ஷர்பத் குடிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டால், அந்த நேரத்தில் ஏற்படும் வலியிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். எடை குறைக்க டயட் செய்கிறவர்கள் தங்கள் டயட் பிளானில் ரோஜா ஷர்பத் அல்லது ரோஜா தேநீரைச் சேர்த்துக் கொண்டால், எடை குறைப்பது எளிதாகும். ரோஜா பூ டீ அல்லது ரோஜா பூ ஷர்பத் குடிப்பதால் கிடைக்கும் மேலும் சில நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
ரோஜா ஷர்பத், ரோஜா டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நீர்சத்து குறைபாட்டைப் போக்குகிறது
கோடையில் உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்படும். அதனால் எப்படியாவது நீர் அருந்துவது மிகவும் அவசியம். ஒரு கோப்பை ரோஜா ஷர்பத் அல்லது ரோஜா டீ உங்கள் நீர் உட்கொள்ளலை அதிகரிக்கும். நீர்சத்து குறைபாட்டு பிரச்சனையைக் குறைப்பதுடன், எடை குறைப்பதையும் எளிதாக்கும்.
ஆன்டிஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளது
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்க உதவும். ரோஜா பூக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானங்களில் பாலிஃபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸைக் குறைப்பதுடன், சில வகையான புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும்.
மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகிறது
பல பெண்களுக்கு மாதவிடாய் வலி மிகவும் வேதனையாக இருக்கும். இந்த நேரத்தில் பல பெண்கள் தலைவலி, முதுகுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, பலவீனம் போன்றவற்றால் அவதிப்படுகிறார்கள். சீன மருத்துவ நிபுணர்கள் ரோஜா மொட்டுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் டீ அல்லது ஷர்பத் மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கப் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஆய்வின்படி, மாதவிடாய் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தும் பின்பும் குடிப்பதால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மனநிலையை மேம்படுத்த உதவுகிறது
ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் அல்லது ஷர்பத்தை தொடர்ந்து குடிப்பதால், மன அழுத்தத்தை எளிதில் சமாளிக்க முடியும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள ரோஜா பானங்கள் மிகவும் உதவும்.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
ரோஜா டீ, ஷர்பத் குடிப்பதால் உடலில் ஏற்படும் மன அழுத்தம் குறையும். அதன் தாக்கம் இதய ஆரோக்கியத்தில் நேர்மறையாக இருக்கும். ரோஜா தேநீரை தினமும் குடிப்பதால் இதய ஆரோக்கியமும் மேம்படும்.
மன ஆரோக்கியத்திற்கு நல்லது
ரோஜா டீ, ஷர்பத்தை தினமும் குடித்தால் மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், மனநிலையை மேம்படுத்துவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். மறதி நோய், மயக்கம் போன்ற அபாயங்கள் குறையும்.
உடலில் ஏற்படும் வெப்பத்தைக் குறைக்கிறது
ஆயுர்வேதத்தின் படி ரோஜா பூக்கள் பித்தத்தைத் தணிக்க மிகவும் நன்றாக வேலை செய்கின்றன. ரோஜா ஷர்பத், ரோஜா டீ குடிப்பதால் இது குறையும். இதனால் உடலில் ஏற்படும் வெப்பம், அசௌகரியம், அமிலத்தன்மை குறையும். அதேபோல் செரிமானமும் மேம்படும். கோடையில் பித்தம் அதிகரிப்பதால் உடல் வெப்பமடையும் என்பதால், இரண்டு மாதங்களும் ரோஜா டீ, ஷர்பத்தை தினமும் குடிக்கவும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள், ஆலோசனைகள் முழுமையாக உண்மையானவை, துல்லியமானவை என்று நாங்கள் கூற முடியாது. நிபுணர்களின் கருத்துகளைச் சேகரித்துத்தான் இந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இவற்றைப் பின்பற்றுவதற்கு முன்பு, தொடர்புடைய துறையில் உள்ள நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.