
நெல்லிக்காய் ரசம்
மணக்க மணக்க நெல்லிக்காய் ரசம் செய்ய தேவையான பொருட்களையும் செய்முறையையும் இங்கு பார்க்கலாம். சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. நெல்லிக்காய் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் , விட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. நெல்லிக்காயில் ஊறுகாய், தேன் நெல்லிக்காய் போன்று பல வகையான உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இந்த நெல்லிக்காயில் நீங்க மணம் நிறைந்த ரசம் கூட செய்யலாம். உங்களுக்கு மணமான நெல்லிக்காய் ரசம் எப்படி செய்வது என்பது தெரியுமா. இங்கு நெல்லிக்காய் ரசம் செய்ய தேவையான பொருட்களையும் செய்முறையையும் இங்கு பார்க்கலாம்.
நெல்லிக்காய் ரசம் செய்ய தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 4
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 2
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
காய்ந்த மிளகாய் – 1
சீரகப்பொடி-1
கொத்து கறிவேப்பிலை,
1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பசை,
மஞ்சள் தூள் 1/2 டேபிள் ஸ்பூன்
சிறிது கொத்தமல்லி,
கடுகு – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
துவரம்பருப்பு – 1/2 கப் (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்)
நெல்லிக்காய் ரசம் செய்யும் முறை:
முதலில் துண்டுகளாக நறுக்கி விதைகளை நீக்கிய நெல்லிக்காய், மிளகு, 1 டேபிள் ஸ்பூன் சீரகம், நறுக்கிய தக்காளி துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போடவும். இதில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து, மென்மையான பேஸ்ட் போல மிக்ஸ் செய்து அதை தனியாக ஒதுக்கி வைக்க வேண்டும்.
ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அதில் கடுகு, 1/2 டீ ஸ்பூன் சீரகம், சீரகப்பொடியை சேர்க்க வேண்டும். அதில் கடுகு வெடித்த பிறகு கறிவேப்பிலை, சிறிய துண்டுகளாக நறுக்கிய 1 காய்ந்த மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இஞ்சி விழுது மற்றும் நீளவாக்கில் கிழித்த பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
மேலும் படிக்க | பார்த்தாலே எச்சில் ஊறும் நெத்திலி கருவாட்டு குழம்பு.. கிராமத்து ஸ்டைலில் எப்படி செய்வது பார்க்கலாமா!
அவை வெந்ததும், மிக்ஸியில் அரைத்த நெல்லிக்காய், தக்காளி பேஸ்ட் சேர்க்க வேண்டும். அனைத்தையும் நன்றாகக் கலக்கவும். தேவையான அளவு உப்பு, அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலக்க வேண்டும். அதில் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதிக்கும் போது, வேகவைத்து மசித்த துவரம் பருப்பையும் சேர்க்க வேண்டும். பின்னர் நன்றாக கலந்து மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
மேலும் படிக்க | அருமையான ருசியில் கேரட் பாயாசம் எப்படி செய்வது பார்க்கலாமா!
இறுதியில் கொத்தமல்லி இலையை சேர்க்க வேண்டும். இவ்வளவுதான்,மணமணக்கும் நெல்லிக்காய் ரசம் ரெடி. நெல்லிக்காய் ரசத்தை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் அது மிகவும் சுவையாக இருக்கும்.