
கிரிக்கெட் வீரர் பும்ரா (source: @sachin_rt )
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மான் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணி தொடரில் தற்போது 1-0 என்ற கணகக்கில் பின்தங்கியுள்ளது.
இதனிடையே பார்மிஹம் மைதானத்தில இன்று தொடங்கிய 2-வது போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா ஆடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட இந்திய அணி 6 ரன்கள் முன்னிலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது பும்ராவின் அற்புதமான அபாரமான பந்து வீச்சு தான். 83 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸில் முன்னிலையை பெற்றுக் கொடுத்தார்.
அதே சமயம், இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் பென் டெக்கட்டும், ஜோ ரூட்டும் ஆடிய அபார ஆட்டத்தை இந்திய பந்துவீச்சாளர்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா உட்பட இந்திய வீரர்களின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. இதனால் வெற்றி 373 ரன்கள் இலக்கை, இங்கிலாந்து அணி 5 விக்கெடுகளை மட்டும் இழந்து எளிதாக எட்டி பிடித்து வெற்றியை உறுதி செய்தது.
2-வது டெஸ்ட் போட்டி: மீண்டும் டான் வென்ற இங்கிலாந்து
இந்நிலையில் பார்மிஹமில் இன்று தொடங்கிய இந்தியா- இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மீண்டும் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 3 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர், பும்ரா ஆகியோர. ஆடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பதிலான ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி ஆகியோர் இடம் பெற்றனர். போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், பும்ராவின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி மிகவும் முக்கியம் என்பதால் தேவையான மாற்றங்களை செய்து இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் – ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், 26 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய கருண் நாயர் 50 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சுப்மான் கில், தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தினார்.
மீண்டும் சதம் அடித்த கேப்டன் சுப்மான் கில்
அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 107 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் கடந்த போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்திய சுப்மான் கில் இந்த போட்டியிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார். ரிஷப் பண்ட் 25, நித்தீஷ்குமார் 1 ஆகியோர் விக்கெட் வீழ்ந்தாலும், 6-வது விக்கெட்டுக்கு ஜடேஜா – சுப்மான் கில் ஜோடி சிறப்பாக விளையாடி வருகிறது.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மான் கில் – ஜடேஜா ஜோடி 142 பந்துகளில் 99 ரன்கள் சேர்த்து அசத்தியுள்ளது. கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில், வோக்ஸ் 2, கார்ஸ், ஸ்டோக்ஸ், பஷீர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். கடந்த போட்டியில் பந்துவீச்சில் அசத்திய பும்ரா, இந்த போட்டியில் இந்திய அணியில் இடம்பெறாதது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தாலும், பும்ரா இல்லாத இந்திய அணி எப்படி செயல்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.