
விவேகானந்தரின் நினைவு நாள் இன்று
Vivekananda: சுவாமி விவேகானந்தர், இந்தியாவின் ஆன்மிக எழுச்சி நாயகனாக போற்றப்படக் கூடியவர். இந்தியாவின் மிக முக்கிய ஆன்மிகத் தலைவர்களில் ஒருவர். அவர் இந்தியாவின் ஆன்மிக பாரம்பரியத்தை உலகளவில் எடுத்துச் சென்றவர். காலண்டரில் மட்டுமல்ல, ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் விவேகானந்தர், நம்மை விட்டு பிரிந்த நாள் இன்று தான். சுவாமி விவேகானந்தரின் மறைவு நாள். அவரது நினைவு நாளில், அவரைப் பற்றி அறிந்து கொள்வோம்.
விவேகானந்தரின் பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை
Vivekananda: விவேகானந்தர் 1863 ஜனவரி 12 ம் தேதி, இன்றை கொல்கத்தா என அழைக்கப்படும் அன்றைய கல்கத்தாவில் பிறந்தார். பிறக்கும் போது பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் நரேந்திரநாத் தத்தா. சிறுவயதிலேயே நல்ல சிந்தனையும், நினைவாற்றலும், புத்தி கூர்மையும் உடையவர் விவேகானந்தர். மேற்கத்திய தத்துவங்கள், இசை, அறிவு, விளையாட்டு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார்.

ஆன்மிகத்தின் மீது கொண்ட நாட்டத்தாலும், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் மீதான ஈர்ப்பு காரணமாகவும், அவரை பின் தொடர்ந்த விவேகானந்தர், ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகு, துறவியாக தன்னுடைய ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கினார். 1893-ல் சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் “அமெரிக்காவின் சகோதரிகள் மற்றும் சகோதரர்களே” என்று அவர் தொடங்கிய உரை, உலகம் முழுவதும் அவரை மட்டுமின்றி, இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்தது.
மேலும் படிக்க | SONY டிவிக்கு ரூ.71 ஆயிரம் ஆஃபர் அறிவித்த அமேசான்.. எந்த மாடல் எப்படி வாங்கலாம்? இதோ விபரம்!
தொடர்ந்து ஆன்மிக சேவையில் நாட்டம் காட்டிய விவேகானந்தர். ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் என்கிற பல்வேற ஆன்மிக சமூக சேவை அமைப்புகளை உருவாக்க காரணமாக இருந்தார். “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற கொள்கையை விவேகானந்தர் வலியுறுத்தினார். வேதாந்த தத்துவத்தை மேற்கத்திய உலகிற்கு அறிமுகப்படுத்தியவரும் விவேகானந்தர் தான். இளைஞர்களின் எழுச்சி தான், இந்தியாவின் எழுச்சி என்பதில் உறுதியாக இருந்தார். அதை இளைஞர்களிடத்தில் ஊக்குவித்தார். அதனால் தான் அவர் இன்றும் இளைஞர்களின் எழுச்சி நாயகனாக பார்க்கப்படுகிறார்.
விவேகானந்தரின் இறுதி நாட்கள்..
Vivekananda: ஆன்மிகத்திற்காக தன்னை அர்ப்பணித்த விவேகானந்தர், 1902 ம் ஆண்டு ஜூலை 4 ம் தேதி, தனது 39 வது வயதில் பேலூர் மடத்தில் இந்த மண்ணை விட்டு மறைந்தார். அவருக்கு ஆஸ்துமா, நீரிழிவு போன்ற உடல்நலக் குறைகள் இருந்ததாகவும், அவை உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தன்னுடைய இறப்பை முன்கூட்டியே உணர்ந்த விவேகானந்தர், “என் ஆன்மா இந்த உடலில் நீண்ட நாட்கள் தங்க முடியாது” என்று கூறியதாக அவரது சீடர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.
மேலும் படிக்க | சுருளி அருவி சுற்றுலா செல்வோமா? என்ன இருக்கு? எப்படி போகலாம்? முழு விபரம் இதோ!
இறந்த நாளில், தியானத்தில் அமர்ந்த விவேகானந்தர், இரவு 9 மணிக்கு சஹஸ்ரார சக்கரத்தை உடைத்து தன்னுடைய உயிரை தானே வெளியேற்றினார் என்று நம்பப்படுகிறது. இது யோகிகள் மேற்கொள்ளும் மிக உயர்ந்த ஆன்மிக சாதனை என்றும் பலரால் கருதப்படுகிறது. விவேகானந்தரின் வாழ்க்கை என்பது ஆன்மிகம், அறிவியல், சமூக சேவை அதை கடந்த மேன்மை என்கிற அடிப்படையில் அமைந்திருந்தது. பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் உடனான அவரது உறவும், அதை தான் இறுதி மூச்சு வரை பின்பற்றியதும், விவேகானந்தரின் சிறப்புகளில் ஒன்று. அன்றும், இன்றும், என்றும் விவேகானந்தரின் புகழ், இந்த மண்ணில் நீடித்திருக்கும்.