
இந்திய விஞ்ஞானி சிவதாணு பிள்ளை
எங்களுக்கு பிரம்மோஸ் ஏவுகணையை விற்க முடியுமா என்று கேட்ட பாகிஸ்தான் ராணுவ ஜெனரலுக்கு ஏவுகணையை உருவாக்கிய சிவதாணு பிள்ளை அளித்த பதிலென்ன தெரியுமா?
பிரம்மோஸ் உலகின் வேகமான சூப்பர்சோனிக் ஏவுகணையாகும். இந்தியாவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் ரஷ்யாவின் என்பிஒ மஷினோஸ்ட்ரோயேனியா அமைப்பு இணைந்து உருவாக்கியதுதான் பிரமோஸ் ஏவுகணை. மேக் 2.8 மற்றும் மேக் 3.5க்கு இடைப்பட்ட வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
இது பாகிஸ்தானின் பாபர் அல்லது ராட் ஏவுகணைகளை விட சிறந்ததாக கருதப்படுபவை ஆகும். பாபர் மற்றும் ராட் ஏவுகணைகள் சப்சோனிக் ஆகும். இவை 290 முதல் 800 கி.மீ. வரை பாய்ந்து சென்று தாக்கக்கூடியது. ஆனால் பிரமோஸ்
1,500 கி.மீ. பாய்ந்து சென்று இலக்கை குறி தவறாமல் தாக்கும் சூப்பர்சோனிக் ஏவுகணை ஆகும்.
மோசமான வானிலை, குறைந்த ரேடார் தெரிவுநிலை உள்ள நிலையிலும், நீர் மூழ்கி கப்பல்களில் இருந்து நிலம், கடல், வான் எல்லைகளில் உள்ள இலக்கை நோக்கி துல்லியமாக ஏவப்படும் திறனை பிரமோஸ் கொண்டுள்ளது. பல்துறை திறன் கொண்ட பிரமோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு விற்பனை செய்வதில்லை என்பது இந்தியாவின் கொள்கை முடிவாக உள்ளது.
இந்த ஏவுகணையை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த பிரமோஸின் தந்தை என்று போற்றப்படும் சிவதாணு பிள்ளை சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, துபாயில் நடைபெற்ற ஏவுகணை மேம்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியில் பாகிஸ்தான் ராணுவ ஜெனரலுடன் சிறிய அளவில் சந்திப்பும் உரையாடலும் நடந்தது.
“இந்தியா தனது வலிமைமிக்க பிரம்மோஸ் ஏவுகணையை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்குமா? என்று ரொம்ப சீரியஸாக கேட்டார்.
அதற்குப் பதிலளித்த நான், “பாகிஸ்தானுக்கு, இலவசமாக வேண்டுமானால் தருவோம்!!” என்று பிள்ளை பதிலளித்தார்.
அதாவது பாகிஸ்தானுக்கு இலவசமாக வேண்டுமானாலும் தருவோமே தவிர பிரமோஸ் ஏவுகணையை உங்களுக்கு விற்பனை செய்ய மாட்டோம் என்பதை தான் சூசகமாக சிவதாணு பிள்ளை தெரிவித்திருந்தார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் உள்கட்டமைப்பு பகுதிகளை இந்தியப் படைகள் குறி வைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தியதில் , இந்தியாவின் பிரமோஸின் பங்கு மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.