
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் பிறந்தநாள் இன்று
Balakumaran : எழுத்துச் சித்தர் என்று அழைக்கப்படும் அளவிற்கு, தன் எழுத்துக்களால் இந்த புவியை கட்டிப் போட்ட மகான் பாலகுமாரன். பலருக்கு வழிகாட்டி, பலருக்கு குரு, பலருக்கு உதாரணம். இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட பாலகுமாரன் பிறந்த தினம் இன்று. ஏன் அவர் போற்றப்படுகிறார்? அவரின் சிறப்பு என்ன? இங்கே காணலாம்:
பாலகுமாரனின் பிறப்பும் படிப்பும்
Balakumaran: பாலகுமாரன், 1946 ம் ஆண்டு ஜூலை 5 ம் தேதி, தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி என்கிற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை வைத்தியநாதன். தாய் சுலோசனா தமிழாசிரியை. தாயிடம் இருந்து தான், அவர் தமிழ் வந்திருக்க வேண்டும். 11 ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்று அறியப்படும் பாலகுமாரன், தட்டச்சு, சுருக்கெழுத்துகளை முறைப்படி பயிற்சி எடுத்தவர்.
மேலும் படிக்க | Tomato: தக்காளி விலை சரிந்தது.. ஜூலை 05, 2025 இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் இதோ!
1969ல், தனியார் நிறுவனம் ஒன்றில் சுருக்கெழுத்தராக தன்னுடைய ஆரம்ப கால பணியை தொடங்கினார் பாலகுமாரன். ஆனால் அவரின் பயணம், இலக்கியம் நோக்கியே நகர்ந்தது. எழுத்து மீது இருந்த தீராத தாகம், அவரை படைப்புகளை நோக்கி படையெடுக்க வைத்தது. கவிதைகள், சிறுகதைகள் என பாலகுமாரனின் பேனாக்கள், காகிதங்களை ஆக்கிரமித்தன. கணையாழி, ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் பாலகுமாரனின் படைப்புகள், அச்சேறின.
படைப்புகளின் பங்காளன் பாலகுமாரன்
Balakumaran: 270க்கும் மேற்பட்ட நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் என பாலகுமாரனின் எழுத்து பங்களிப்பு எண்ணிடலங்காதது. நாவல்களின் நாயகனாக மாறிய அவர், உடையார் – ராஜராஜ சோழன் மற்றும் தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழன், இரும்புக் குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள், தாயுமானவன், அகல்யா, எட்ட நின்று சுட்ட நிலா, நிழல் யுத்தம் போன்ற படைப்புகள், அவரை ஈர்க்கும் எழுத்தாளர் ஆக்கியது.

எழுத்து துறை மட்டுமல்லாது திரைத்துறையிலும் பாலகுமாரனின் பங்களிப்பு அபரிவிதமானது. நாயகன், குணா, ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், பாட்ஷா, மன்மதன், புதுப்பேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள பாலகுமாரன், கே.பாலசந்தர், பாக்யராஜ் உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு திரைப்படத்தை இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலகுமாரனின் முக்கிய விருதுகள் சில இதோ
விருது | பெற்ற படைப்பு / காரணம் |
---|---|
தமிழ்நாடு மாநில விருது | சுகஜீவனம் சிறுகதை தொகுப்பு, காதலன் திரைப்பட வசனம் |
கலைமாமணி விருது | இலக்கியத்திற்கான பங்களிப்பு |
ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது | இரும்புக் குதிரைகள் நாவல் |
இலக்கிய சிந்தனை விருது | மெர்க்குரிப் பூக்கள் நாவல் |
ஏன் அவர் எழுத்துச் சித்தர்?
Balakumaran: பாலகுமாரன், தீவிர யோகி ராம்சுரத்குமார் பக்தர். அவரைப் போற்றி வழிபட்டி பாலகுமாரன், யோகிராம் பற்றிய வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். இது தவிர காதலாகி கனிந்து, சொர்க்கம் நடுவிலே போன்ற ஆன்மிக நாவல்களையும் எழுதியுள்ளார் பாலகுமாரன். அதே போல, தியானம், மூச்சுப் பயிற்சி, சித்த சிந்தனைகள் குறித்தும் நூல்கள் எழுதியுள்ளார். இதனாலேயே அவரை, அவருடைய வாசகர்கள் ‘எழுத்துச் சித்தர்’ என்றும் அன்போடு அழைத்தனர்.
மேலும் படிக்க | ‘தன் உயிரே தானே வெளியேற்றிய மகான்..’ விவேகானந்தர் மறைந்த தினம் இன்று!
தன் மூச்சு இருக்கும் வரை, எழுத்துத் துறையில் இருந்த பாலகுமாரன், மே 15, 2018 அன்று தன் மூச்சை நிறுத்தினார். சென்னை தனியார் மருத்துவமனையில் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தன் எழுத்துக்களால் ஒட்டுமொத்த சமுதாயத்தை கட்டிப் போட்ட அந்த பாலகுமாரன், பாலனாக உதயமான நாள் இன்று. மறைந்தாலும், தன் படைப்புகளால் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அவருக்கு, நம்முடைய நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.