
சின்ன தல சுரேஷ் ரெய்னா ஹீரோவாக தமிழ் சினிமாவில் களமிறங்க உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருந்த சுரேஷ் ரெய்னா உலக கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை செய்துள்ள நிலையில், சில வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பிறகு கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக மாறிய இவர், தற்போது சினிமாவில் நடிகராக களமிறங்க உள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, ரசிகர்களால் சின்ன தல என்று அழைக்கப்பட்டு வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் தோனி தல என்றால், சின்ன தல ரெய்னா தான். இவருக்கும் இடையே அவ்வளவு நெருக்கம் உண்டு. தோனி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த சில மணி நேரங்களில் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். அதன்பிறகு கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை கொடுத்து வரும் ரெய்னா, அடுத்த சீசனில் சி.எஸ்.கே அணிக்கு புதிய பயிற்சியாளர் வருவார் என்றும் கூறியிருந்தார்.
இதனிடையே தற்போது சின்ன தல ரெய்னா, விரைவில் ஒரு தமிழ்ப் படத்தில் நடிகராக அறிமுகமாகவுள்ளார். இந்தச் செய்தி கிரிக்கெட் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் (Dream Knight Stories) தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படமாக இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்த அறிவிப்பை அவர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டனர். அதை ரெய்னாவும் தனது பக்கத்தில் ஷேர் செய்து உறுதிப்படுத்தினார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சின்ன தல @sureshraina3-ஐ #DKSProductionNo1-ல் வரவேற்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான அவரது நீண்ட கால தொடர்பின் காரணமாகவே, தமிழ்நாட்டு ரசிகர்கள் ரெய்னாவை “சின்ன தல” என்று அழைத்து வந்தனர். இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்ட ஒரு குறும்பு வீடியோ, ரெய்னா ஒரு மைதானத்திற்குள் நுழையும் காட்சிகளை உள்ளடக்கியிருந்தது.
அங்கே ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவரை உற்சாகப்படுத்த, அவரது கிரிக்கெட் நாட்களின் காட்சிகள் மீண்டும் ஒருமுறை கண்முன் வந்து சென்றன. இது ரசிகர்களுக்கு ஒரு அழகான நினைவூட்டலாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தை டி. சரவண குமார் வழங்க, லோகன் இயக்க உள்ளார். மேலும், புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். ரெய்னாவின் இந்தத் திரைப் பயணம் எப்படி அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாகியுள்ளது.
38 வயதாகும் சுரேஷ் ரெய்னா, சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமைக்குரியவர். 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் இவர் ஒரு முக்கிய பங்கை வகித்தார். 2022-ல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற ரெய்னா, தற்போது புதிய களத்தில் தனது திறமையை நிரூபிக்கத் தயாராகி வருகிறார்.
கிரிக்கெட் மைதானத்தில் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களைக் கவர்ந்த ரெய்னா, வெள்ளித்திரையிலும் அதே மாயாஜாலத்தை நிகழ்த்துவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அதே சமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெளையாடிய ஹர்பஜன் சிங், இந்தியில் சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தாலும் தமிழில், ப்ரண்ஷிப் என்ற படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். அதேபோல் டுவைன் பிராவோ தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இவர்கள் இருவரையும் தொடர்ந்து தற்போது சி.எஸ்.கே அணியின் 3-வது வீரராக ரெய்னா ஹீரோவாக களமிங்குகிறார்.