
‘மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி
AIADMK: அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ள எழுச்சிப் பயணம் குறித்தும், அதன் தாக்கம் குறித்தும் அலசுகிறது இந்த சிறப்பு கட்டுரை
AIADMK: “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கி உள்ளார். இந்த எழுச்சி பயணம் எடப்பாடியின் அரசியல் உலகில் திருப்புமுனையை ஏற்படுத்துமா என அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
ஸ்டாலின் நடத்திய விடியல் பயணம்
AIADMK: இதற்கு முன்பு அதிமுக ஆட்சி முடியும் தருவாயில் இதே போன்று மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் விடியல் பயணத்தை மேற்கொண்டு “முடியட்டும்… விடியட்டும்…” என்ற கோஷத்தை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்றார். விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், தொழிற்சங்கங்களைச் சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், முந்தைய அதிமுக ஆட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து பேசினார். அதேபோல பொதுமக்களையும், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்களையும் சந்தித்து அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் மனுக்களாக வாங்கிக் கொண்டார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஸ்டாலின் உறுதி அளித்தார். விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகளை தனது தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டி, தான் ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்றி தருவேன் என்றும் வாக்குறுதி அளித்தார். சொன்னதைப் போலவே அவரிடம் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் தேர்தல் அறிக்கையில் விரிவாக வெளியிட்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அவற்றையெல்லாம் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்திருந்தார்.
தற்போதைய திமுக ஆட்சியில் அவற்றையெல்லாம் முதல்வர் மு க ஸ்டாலின் நிறைவேற்றிக் கொடுத்து விட்டாரா? என்பது வேறு விஷயம்.
சரி விஷயத்துக்கு வருவோம். கடந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்த போது நடத்திய அந்த “விடியல் பயணம்” உண்மையில் ஸ்டாலினுக்கு பெரிய பலமாக அமைந்தது. அனைத்து தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் சுமார் 540 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது.
வழக்கமாகவே திமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதுதான் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் நடந்தது.

பிரசாந்த் கிஷோரின் தேர்தல் உத்தி
AIADMK: தமிழகத்தில் மட்டுமல்ல, ஆந்திராவில் முன்பு சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருக்கும் பொழுது ஜெகன்மோகன் ரெட்டி நடத்திய மாநிலம் தழுவிய நடை பயணமும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்தது.
அதேபோன்று ஆந்திராவில் 2023ல் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு, சந்திரபாபு நாயுடு சென்ற எழுச்சி பயணம் ஆந்திராவில் மீண்டும் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்தது.
தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமல்ல; பல்வேறு மாநிலங்களிலும் தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர்களாக இருப்பவர்கள் மாநிலம் முழுவதும் பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டி செய்யும் பிரசாரம் பெரியளவில் எடுபடவே செய்துள்ளது.
தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்த இந்த பாணியை தான் தற்போது எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார்.
இந்த முறை எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” எனக்கூறி இந்த பிரசார பயணத்தை தொடங்கியுள்ளார்.
எடப்பாடிக்கு பயனளிக்குமா?
AIADMK: இது எந்த அளவில் எடப்பாடி பழனிசாமிக்கு பயனளிக்கும் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம். அப்போது அவர்கள் கூறும்போது, “தற்போதைய ஆளுங்கட்சியான திமுக மீதும் அதன் கூட்டணி கட்சிகள் மீதும் சில அதிருப்தி இருக்கவே செய்கிறது. நீட் தேர்வு ரத்து, கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளையும் திமுக அரசு இதுவரை நிறைவேற்றி தரவில்லை.
அதேசமயம் மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் பாசிட்டிவான தாக்கத்தையே ஏற்படுத்தி உள்ளது.
தொழில், கல்வி, சுகாதார வளர்ச்சியிலும் உள்ளூர் வளர்ச்சி விகிதத்திலும் (GDP) தமிழகம் இந்திய அளவில் முன்னேறிய மாநிலமாக உள்ளது.
தற்போதைய நிலையில் திமுகவின் பலம் அதன் கூட்டணி கட்சிகள் தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவை மட்டுமே திமுக ஆட்சியை தக்க வைக்க உதவும் என்று கூறிவிட முடியாது.
எடப்பாடி பழனிசாமி மீது ஆளுங்கட்சி தரப்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த போதிலும் அதிமுக என்னும் கட்சியை வலுவாக கட்டமைத்து வைத்துள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததுடன், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரையும் அரவணைத்து செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகி விட்டார்.
ஓபிஎஸ்-க்கு வாய்ப்பளிப்பாரா எடப்பாடி?
AIADMK: இருப்பினும் ஓபிஎஸ்-ஐ மட்டும் ஏற்றுக்கொள்ள தயங்குகிறார். டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரின் வரவாலும், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளதாலும் தென் மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஏற்படுத்திய தாக்கத்தை இப்போது ஏற்படுத்த முடியும் என்று எடப்பாடி நம்புகிறார்.
கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே அதிமுக- பாஜக கூட்டணி வலுவாக உள்ள நிலையில் 2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கைப்பற்றி விட முடியும் என்று அதிமுக நம்புகிறது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை போன்ற வட மாவட்டங்களும், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மத்திய மாவட்டங்களும், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற தென் மாவட்டங்களும் பெரிதும் கை கொடுத்தது. கொங்கு மண்டலத்தில் கோவை, தர்மபுரி மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட திமுக கூட்டணியால் வெற்றி பெற முடியவில்லை.

அதிமுக உடன் மெகா கூட்டணி அமையுமா?
AIADMK: இந்த முறை அதிமுகவுடன் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் மட்டுமே கூட்டணி அமைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. தேமுதிக, பாமக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி போன்றவை கூட்டணியில் இணைவதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி கிட்டத்தட்ட இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது.
அதேசமயம் திமுக கூட்டணி காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், கொமதேக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளின் கூட்டணியுடன் அசுர பலத்துடன் உள்ளது.
திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக கூட்டணியை மட்டும் பலப்படுத்தினால் போதாது. மக்கள் செல்வாக்கையும் பெற்றாக வேண்டும். திமுக ஆட்சிக்கு எதிரான மக்களின் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் சேகரித்தால் மட்டுமே அதிமுக கூட்டணியால் வெற்றி பெற முடியும்.
ஏற்கனவே நாம் தமிழர் கட்சியும், நடிகர் விஜய்யின் தவெகவும் திமுகவுக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. இவ்விரு கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியை அதிமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒருவேளை இவ்விரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் சேராமல் தனித்துப் போட்டியிட்டால் திமுகவுக்கு சாதகமாகி விடக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு தான் தற்போது இந்த எழுச்சி பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார். இந்த எழுச்சி பயணத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.