
கேரட் பாயாசம்
அசத்தலான ருசியில் கலர்புல்லான கேரட் பாயாசம் செய்ய தேவையான பொருட்களையும் செய்முறையையும் இங்கு விரிவாக பார்க்கலாம்.
கேரட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவும். கேரட்டில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. பச்சையாக கேரட் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கேரட்டின் நிறமே குழந்தைகளுக்கு கூட மிகவும் பிடிக்கும். கேரட்டில் பலரும் குழம்பு பொரியல் என செய்து சாப்பிடுகின்றனர். சிலர் தினமும் கேரட்டை பச்சையாக ஜூஸ் செய்து குடிக்கின்றனர். குழந்தைகளுக்கு உணவு கொடுக்க ஆரம்பிக்கும் போதே கேரட்டை வேக வைத்து மசித்து கொடுக்கின்றனர். பெரியவர்களை பொறுத்த வரை ஒரு நாளைக்கு ஒரு கேரட் சாப்பிடுவது கண் பார்வையை மேம்படுத்தும் என கூறப்படுகிறது. ஆனால் கேரட்டை வழக்கம் போல் சாப்பிட்டு பலருக்கும் போரடித்து விடுகிறது. நீங்கள் கேரட்டை ஒரு முறை இந்த மாதிரி பாயாசம் செய்து பாருங்கள். அதன் ருசி அருமையாக இருக்கும். பொதுவாக வீட்டில் விஷேசம் என்றால் நாம் பாயசம் வைப்போம். இந்த கேரட் பாயாசத்தை ஒரு முறை செய்து கொடுங்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்கள் கூட அடிக்கடி இந்த மாதிரி பாயாசம் செய்து தர சொல்லி கேட்பார்கள்.
கேரட் பாயசம் செய்ய தேவையான பொருட்கள்
பால் – இரண்டரை கப்
துருவிய கேரட் – ஒரு கப்
சர்க்கரை – நான்கு கரண்டி
ஏலக்காய் – இரண்டு
குங்குமப்பூ – சிறிதளவு
உலர் திராட்சை – பத்து
பாதாம் பருப்பு – 5
முந்திரி -5
நெய் – 2 கரண்டி
கேரட் பாயசம் செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் சேர்க்க வேண்டும். நெய் சூடானதும் உலர் திராட்சை, பாதாம் மற்றும் முந்திரி பருப்பை முதலில் சேர்த்து வறுக்க வேண்டும். பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். பின்னர் வறுத்த பொருட்களை எடுத்து தனியாக வைக்க வேண்டும்.
மேலும் படிக்க | கொங்கு நாட்டு ஸ்டைலில் பச்சை பயறு கடையல் எப்படி செய்யணும் தெரியுமா.. சூடான சாதத்துடன் சாப்பிட்டு பாருங்க
அதே வாணலியில் துருவிய கேரட்டைச் சேர்க்க வேண்டும். குறைந்த தீயில் வைத்து கேரட்டை நன்றாக வதக்க வேண்டும். கேரட்டை 5 நிமிடங்கள் வதக்கிய பிறகு அதில் ஏற்கனவே காய்ச்சிய சூடான பாலை சேர்க்க வேண்டும்.
குறைந்தது கால் மணி நேரம் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கேரட்டை பாலில் வேக வைக்க வேண்டும். அடிக்கடி கிளறி விட வேண்டும். பின்னர் அதில் ஏலக்காயை தட்டி சேர்க்க வேண்டும். மேலும் குங்குமப்பூ இதழ்கள், வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவை கெட்டியாகும்போது அடுப்பை அணைக்கவும்.நன்றாக ஆறிய பிறகு பரிமாறலாம்.
மேலும் படிக்க | பார்த்தாலே எச்சில் ஊறும் நெத்திலி கருவாட்டு குழம்பு.. கிராமத்து ஸ்டைலில் எப்படி செய்வது பார்க்கலாமா!
இந்தப் பாயசத்தை ஒரு முறை செய்து பாருங்கள் அதன் ருசி உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்.