
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வியூகம் என்ன?
Dr Ramadoss: மூத்த மகள் காந்திமதியை முன்னிறுத்தும் டாக்டர் ராமதாஸின் வியூகம் தான் என்ன? விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸுக்கும், மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. கட்சியின் செயல் தலைவராக உள்ள அன்புமணி ராமதாஸை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்த டாக்டர் ராமதாஸ், இந்த கட்சியை உருவாக்கியவன் நான்தான். எனக்கே சி.பார்ம், பி.பார்ம் ஆகியவற்றில் கையெழுத்திடும் அதிகாரம் உள்ளதால் எனது தலைமையில் செயல்படுவது தான் உண்மையான பாட்டாளி மக்கள் கட்சி என்றும், பாமக சார்பில் யாருக்கு சீட்டு கொடுப்பது என்பதையும் நான் தான் முடிவு செய்வேன் என்றும் டாக்டர் ராமதாஸ் கூறி வருகிறார்.
இந்நிலையில் தான் திண்டிவனத்தில் நேற்று நடந்த பாமக செயற்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் செயல் தலைவர் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் சையது முகம்மது உசேன், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, மகளிர் அணி சுஜாதா கருணாகரன், அருள் எம்எல்ஏ, சமூகநீதி பேரவை வக்கீல் கோபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஒரு சில மாவட்ட தலைவர்கள் மட்டும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கட்சிக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கும் அன்புமணிக்கு கண்டனம் தெரிவிப்பது, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சித் தலைமையின், உத்தரவுக்கு கட்டுப்படாமல் கட்சி நிறுவன மாண்பை மீறியதோடு, நிறுவனரே தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும், பொறுப்பற்ற பதிலை சொல்லி பொதுவெளியில் அவருடைய பேச்சுக்கு கட்டுப்படாமல் இருக்கும் டாக்டர் அன்புமணிக்கு வன்மையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
செயல் தலைவர் அன்புமணி வருத்தம் தெரிவிக்க வேண்டும்!
Dr Ramadoss: இச்செயலுக்கு செயல் தலைவர் வருத்தம் தெரிவித்துக் கொள்வதுடன், பொது வெளியில் கட்சிக்கு மட்டும் களங்கம் விளைவிக்காமல், நிறுவன தலைவருக்கும் களங்கத்தை உருவாக்கும் வகையில் செய்துள்ள செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற செயலை யார் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நிறுவனத் தலைவருக்கு அங்கீகாரம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
பாமகவின் புதிய தலைவராக ராமதாஸ் கடந்த மாதம் 30 ஆம் தேதி பதவியேற்றது முதல் அவருடைய நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாராவது செயல்பட்டால் அது சட்டப்படி மட்டுமல்லாமல், கட்சி விதிகளுக்கு முரணானது என்றும், மாநில தலைவர் மற்றும் நிறுவனர் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் முழு அதிகாரம் அளித்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அன்புமணி அவுட்.. காந்திமதி இன்..!
Dr Ramadoss: திண்டிவனத்தில் நடந்த பாமக செயற்குழு கூட்டத்தில் எந்த இடத்திலும் அன்புமணியின் பெயர், புகைப்படம் இடம் பெறவில்லை. அண்மையில் தைலாபுரம் தோட்டத்திலிருந்தும் அன்புமணியின் புகைப்படம் இடம்பெற்ற பேனர், சுவரொட்டிகள் கிழித்து எறியப்பட்டிருந்த நிலையில் இந்த செயற்குழு கூட்டத்திலும் முற்றிலுமாக அன்புமணியின் பெயர், புகைப்படம் எதுவும் இடம்பெறவில்லை.
அதேசமயம் எப்போதும் பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டத்திற்கு வராத டாக்டர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது கட்சியினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் மேடைக்கு வராமல் முன் வரிசையில் அமர்ந்திருந்த காந்திமதியை ராமதாஸ் மேடைக்கு அழைத்தார். மேடையில் அவருக்கு நாற்காலி போடப்பட்டு உட்கார வைத்த ராமதாஸ், தன்னுடைய பல போராட்டங்களுக்கு பின்புலமாக காந்திமதி இருந்தார் என அவரை முன்னிலைப்படுத்தி கட்சியினரிடையே பேசினார்.
தனக்கும் கட்சிக்கும் எதிராக செயல்பட்டு வரும் அன்புமணியை முற்றிலுமாக புறக்கணித்து மகள் காந்திமதியை முன்னிலைப்படுத்தியதன் மூலம் தனக்கு அடுத்த அரசியல் வாரிசாக காந்திமதியை அடையாளம் காட்டி இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் கூறி வருகின்றனர்.
இது தான் நடக்கப் போகிறதா?
Dr Ramadoss: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலிலும் 2029 நாடாளுமன்ற தேர்தலிலும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது; எவ்வளவு சீட்டு பெறுவது என்பது குறித்தும் அடுத்தடுத்த கட்சியின் நிகழ்வுகளில் ராமதாஸ் தெரிவிப்பார் என்றும், மூத்த மகள் காந்திமதியை தன்னுடைய அரசியல் வாரிசாக அறிவித்தால் அதில் என்ன தவறு இருக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சியினர் இப்போதே கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர்.
உண்மையிலேயே அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை விட்டு வெளியேற்றப்படுவாரா? காந்திமதி, ராமதாசின் அரசியல் வாரிசாக முன்னிலைப்படுத்தப்படுவாரா என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகளில் தெரிந்து கொள்ளலாம். அதுவரை அவசரப்படாதீர்கள் என்று கட்சியின் மூத்த மாநில நிர்வாகிகள் கூறுகின்றனர்.