
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி
EPS: 2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினுக்கு மரண அடி கிடைக்கும் என்று செஞ்சியில் நடந்த மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
EPS: மக்களைக் காப்போம் தமிழகம் மீட்போம் நான்காம் நாள் சுற்றுப்பயணத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூர், மயிலம் ஆகிய தொகுதிகளில் மக்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, அடுத்தபடியாக செஞ்சி தொகுதியில் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் மக்களிடம் பேசினார். அப்போது, “நான்கு நாளாக நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன், கோவையில் முடித்துவிட்டு விழுப்புரம் நேற்று வந்தேன். இன்றோடு விழுப்புரம் சுற்றுப்பயணம் முடிகிறது. செஞ்சி தொகுதியில் மற்ற இரு தொகுதிகளை விட கடல் போல் மக்கள் வெள்ளம் காட்சியளிக்கிறது. செஞ்சி அதிமுக கோட்டை என்பதை மக்கள் நிரூபிக்கிறீர்கள். வருண பகவான் நம்மை வரவேற்கிறார், இதுவே நமது வெற்றிக்கு சாட்சி,’’ என்றார்.
மேலும் படிக்க | Air India: 7 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட ஆலோசனை.. ஏர் இந்தியா விமான விபத்தில் திடுக் தகவல்!
நீங்கள் கூட்டி வந்தால் பிரதமர் நல்லவரா?
EPS: தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘4 ஆண்டுகால ஆட்சியில் செஞ்சி தொகுதிக்கு என்ன செய்தார் ஸ்டாலின்? திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, ரவுடிகள் ராஜ்ஜியம், பாலியல் சீண்டல், இதுதான் தினந்தோறும் செய்தியாக வருகிறது. இப்படிப்பட்ட கேடுகெட்ட ஆட்சி தேவையா? மக்களுக்குப் பாதுகாப்பில்லாத மோசமான ஆட்சி அகற்றப்படவேண்டும். குடும்ப ஆட்சி மன்னராட்சி நடக்கிறது. வீட்டு மக்களைப் பற்றி தான் கவலை, நாட்டு மக்களைப் பற்றிக் கவலையில்லை.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது என்னவெல்லாம் பேசுனீங்க, மோடி சென்னை வந்தபோது கருப்பு கொடை பிடித்தீர்கள், பலூன் விட்டீர்கள். ஆட்சிக்கு வந்ததும் வெள்ளைக் குடை பிடிக்கிறார் ஸ்டாலின்.
இரட்டை வேடம் போடுகின்ற கட்சி திமுக. இவர் கூட்டிவந்தால் பிரதமர் நல்லவர், நாங்க பேசுனா அதிமுக பாஜகவின் அடிமையா? நீங்கள்தான் காங்கிரஸ் அடிமை. அறிவாலயத்தின் மேல்மாடியில் தாயாரிடம் விசாரணை நடத்தி, சிபிஐயை வைத்து மிரட்டி கூட்டணியில் இணைந்து கையெழுத்து வாங்கியது காங்கிரஸ் கட்சி.
எங்களுக்கு வேண்டுமென்றால் கூட்டணி வைப்போம் இல்லையென்றால் விலகிடுவோம். திமுகவை அகற்ற மட்டுமே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். 1999ல் பாஜகவோடு திமுக கூட்டணி வைத்தது. மத்திய அமைச்சரவையில் இருந்தனர். முரசொலி மாறன் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் போய்விட்டது திமுக. கொள்கையே இல்லாத கட்சி திமுக.
திமுகவின் அடிமை போல கூட்டணி கட்சிகள்
EPS: ஒரே கொள்கையுடன் கூட்டணியாக இருக்கிறோம் என்கிறார் ஸ்டாலின். காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் எல்லாவற்றுக்கும் ஒரே கொள்கையா? வெவ்வேறு கொள்கை கொண்ட கட்சிகள்தான், திமுகவிடம் அடிமை போல ஒன்றிணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு 2026ல் மரண அடி கொடுங்க மக்களே. நீங்க பாஜகவோடு கூட்டணி வைத்தபோது இனிச்சது, நல்ல கட்சி, நாங்க கூட்டணி வச்சா மதவாத கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார் எடப்பாடி என்கிறார் ஸ்டாலின்.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது, பாஜக அரசு நிறைய நிதி கொடுத்தது. 16 ஆண்டுகள் திமுக மத்தியில் ஆட்சியில் இருந்தபோது என்ன நிதி, திட்டம் கொண்டுவந்தீங்க? கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்றவே ஆட்சியில் பங்கு வகித்தீர்கள். எங்களைப் பற்றிப் பேச எந்த அருகதையும் திமுகவுக்கு இல்லை. கண்ணுக்குத் தெரியாத காற்றிலும் ஊழல் செய்த ஒரே அரசு திமுக அரசு. 2ஜி ஊழல். கனிமொழி, ராஜா உள்ளிட்டோர் திகார் சிறையில் அடைக்கபப்ட்டனர். உங்களுக்கு எங்களைப்பற்றிப் பேச அருகதையில்லை.

போட்டோ ஷூட் முதல்வர் ஸ்டாலின்
EPS: விவசாய பூமி செஞ்சி தொகுதி. விவசாயிகளுக்கு கரும்புக்கு டன்னுக்கு ரூ.4000, நெலுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500 கொடுப்பேன் என்று சொல்லி, கொடுக்கவில்லை. பயிர்க்கடன் அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் கொடுத்தோம். ரூ.1240 கோடியில் ஏரி, குளங்கள் தூர்வாரினோம். அதில் கிடைத்த வண்டல் மண் விவசாயிகளுக்கு அடி உரமாகப் பயன்பட்டது. உங்களுக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்?
நமக்கு நாமே திட்டத்தில் எங்க பகுதியில் தலைவாசல் பகுதிக்கு வந்து பேன்ட் ஷர்ட் போட்டு, ஷூ போட்டு ஏர் ஓட்டுனார் ஸ்டாலின். ஆனால் நான் விவசாயியாக வாழ்கிறேன், இது மம்முட்டி புடிச்ச கை. உங்களைப் போன்று உங்க அப்பா மூலம் வரல. படிப்படியாக வந்தேன். திமுகவில் யாராவது முதல்வர் ஆக முடியுமா? நாங்க சொல்றோம், உங்க கட்சியை காப்பாத்திக்கோங்க. எங்க அதிமுகவில் இபிஎஸ் இல்லைன்னா… சிவிசண்முகம் வருவார், அவர் இல்லைன்னா இன்னொருவர்.
மேலும் படிக்க | AIADMK: ‘இபிஎஸ் பேச்சு.. தவறாக சித்தரித்தால் சட்ட நடவடிக்கை’ அதிமுக எச்சரிக்கை!
எந்தக் கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது. அம்மா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை உடைக்க திமுகவினர் முயற்சித்தனர். நம் கட்சி எட்டப்பர்கள் திமுகவுடன் சேர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து ஓட்டுப்போட்டனர். சபாநாயகர் இருக்கையில் திமுக எம்.எல்.ஏக்கள் உட்கார்ந்தனர். டேபிளில் ஏறி டான்ஸ் ஆடினர். இவரெல்லாம் ஆட்சி நடத்தலாமா? ஏதோ சந்தர்ப்ப சூழல் ஆட்சி அமைந்துவிட்டது. 2026 அதிமுக பெரும்பான்மை இடம் பெற்று வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் சட்டை வேட்டி இல்லாமல் வெளியில் வரப்போறீங்க. ஸ்டாலின் டென்ஷன் ஆன ஆளு. ஆனால், நாங்க எதற்கும் அஞ்சியது கிடையாது, துணிச்சலோடு செயல்படக்கூடியவர்கள். மக்களுக்காக எங்கள் உயிரையும் நாங்கள் அர்ப்பணிப்போம்.
வீடு விடாக பிச்சை கேட்கிறார்கள்
EPS: பதவி முக்கியமல்ல, மக்கள் சேவைதான் எங்களுக்கு முக்கியம். அதிமுக.காரன் தலைநிமிர்ந்து ஓட்டு கேட்பான். ஸ்டாலின் இப்போது வீடுவீடாக பிச்சை கேட்பதுபோல உறுப்பினர் சேர்க்கிறார், மக்கள் செல்வாக்கு இழந்துவிட்டது திமுக. 2026ல் மக்கள் உங்களை வீட்டுக்கு அனுப்புவார்கள். அதிமுகவுக்கு மகத்தான் ஆட்சியைக் கொடுப்பார்கள். 100 நாள் வேலைத்திட்டத்தை 50 நாளா குறைத்தனர். சிலிண்டர் 100 ரூபாய் மானியம் கொடுக்கவில்லை. கல்விக் கடன் ரத்து செய்யவில்லை. அத்தனையும் பொய் வாக்குறுதிகள். அதுக்கெல்லாம் முடிவுகட்டும் தேர்தல் 2026.
இந்த மக்கள் ஆட்சிக்கு முன்னுரை, 2026ல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணிக் கட்சியினருக்கு அவர்களது சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின’’ என்று தன்னுடைய பேச்சை நிறைவு செய்தார் எடப்பாடி பழனிசாமி.