
குற்றவியல் நடுவர் நீதிமன்றமாக ஜார்ஜ் டவுன் 3-வது நீதிமன்றம் அறிவிப்பு
எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான சிறு குற்ற வழக்குகளை விசாரிக்கும் பிரத்யேக குற்றவியல் நடுவர் நீதிமன்றமாக ஜார்ஜ் டவுன் 3-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான சிறு குற்ற வழக்குகளை விசாரிக்க பிரத்யேக குற்றவியல் நடுவர் நீதிமன்றமாக ஜார்ஜ் டவுன் 3-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அவதூறு வழக்கு
காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை நிர்வாகம் குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறி பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா மற்றும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரான முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக கடந்த 2023ம் ஆண்டு எழும்பூர் குற்றவியில் நடுவர் நீதிமன்றத்தில் அறக்கட்டளை பொதுச் செயலாளரும், மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியின் தாளாளருமான எம்.ஜி. தாவூத் மியாகான் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த எழும்பூர் நீதிமன்றம், எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. அதன்படி சிறப்பு நீதிமன்றத்தை நாடியபோது எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து அதற்கேற்ப பரிந்துரைக்கப்படும் வழக்குகளை மட்டுமே தங்களால் விசாரிக்க முடியும் என்று மறுத்தது.
குற்றவியல் நடுவர் நீதிமன்றமாக ஜார்ஜ் டவுன் 3
இதையடுத்து, எம்எல்ஏ எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிரான தனது வழக்கை விசாரிக்க சென்னையில் சிறப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை அமைக்க உத்தரவிடக் கோரி தாவூத் மியாகான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளையும், அரசுத் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.வினோத்குமாரும், உயர் நீதிமன்ற பதிவுத்துறை தரப்பில் வழக்கறிஞர் அருண் அன்புமணியும் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது தமிழக அரசு தரப்பி்ல், சென்னையில் எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான சிறு குற்ற வழக்குகளை விசாரிக்க பிரத்யேக குற்றவியல் நடுவர் நீதிமன்றமாக ஜார்ஜ் டவுன் 3-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, எம்எல்ஏ ஜவாஹிருல்லா, முன்னாள் எம்பி அப்துல் ரஹமான் ஆகியோருக்கு எதிராக மனுதாரர் ஜார்ஜ் டவுன் 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கோரலாம் என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.
மேலும் படிக்க : தமிழ்நாடு அரசியலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எழுச்சி
அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, ஜவாஹிருல்லா, அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக மனுதாரர் ஜார்ஜ் டவுன் 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடலாம், என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.