
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தாலும், 2-வது போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திய இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் கேப்டன் சுப்மான் கில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் 2-வது இன்னிங்கில் சதம் என மொத்தம் 430 ரன்கள் குவித்து, தனி ஒருவனாக ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பிய கில், வெற்றிக்குப் பிறகு அளித்த பேட்டியில் பேட் மற்றும் பந்துக்கு இடையே ஒரு நியாயமான போட்டி இல்லாதது ஆட்டத்தின் உண்மையான சாராம்சத்தை குறைக்கிறது என்று கூறியுள்ளார்.
பேட்ஸ்மேன் ஆதிக்கம் – பந்துவீச்சாளர்களுக்கு சவால்
பர்மிங்காமில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. புதிய டியூக்ஸ் பந்து சுமார் 30 ஓவர்கள் மட்டுமே கடினமாக இருந்து, பிட்ச்சில் இருந்து சிறிதளவு சுழற்சியை வழங்கியது. அதன் பிறகு, பந்து மென்மையாகி, பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டுகளை எடுப்பது மிகவும் கடினமாகியது என்று கூறியுள்ளார்.

மேலும், பிட்ச்சை விட, பந்து மிக விரைவாக மென்மையாகி, வடிவத்தை இழக்கிறது. இதற்கு வானிலை, ஆடுகளங்கள் அல்லது வேறு ஏதேனும் காரணம் என்று தெரியவில்லை, ஆனால் இந்த சூழ்நிலைகளில் பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டுகளை எடுப்பது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது. ஒரு அணியாக, விக்கெட்டுகளைப் எடுப்பது கடினம் என்றாலும் ரன்கள் எளிதாக வருகின்றன என்பதை அறிந்தால், நிறைய விஷயங்கள் கட்டுப்பாட்டிற்கு வெளியே சென்று விடுகின்றன.”
“குறைந்தபட்சம் சிறிது உதவி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பந்து ஏதாவது செய்தால், நீங்கள் விளையாடுவதை ரசிப்பீர்கள். முதல் 20 ஓவர்களுக்கு மட்டுமே பந்து சரியாக இருக்கும். அதன் பின்னர் நீங்கள் மீதி நாளை தற்காப்புடன், எதிரணியின் ரன்களை எப்படி நிறுத்துவது என்று யோசித்து செயல்பட வேண்டும் என்றால், ஆட்டம் அதன் சாராம்சத்தை இழந்துவிடும்.
பந்துவீச்சாளர்களின் அபார பங்களிப்பு
இந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும், இந்திய பந்துவீச்சாளர்கள் ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை விட சிறப்பாக செயல்பட்டனர். புதிய பந்தில் கிடைத்த குறுகிய கால சாளரத்தைப் பயன்படுத்தி, 20 விக்கெட்டுகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக இருந்தன. ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் இந்த டெஸ்ட் போட்டிக்கு வருவது ஒரு பெரிய, பெரிய சாதனை. 20 விக்கெட்டுகளை எடுக்க முடியுமா என்று நிறைய கேள்விகள் இருந்தன. இந்த இரண்டு வீரர்களும் செயல்பட்ட விதம் அருமை. விவரிக்க வார்த்தைகள் இல்லை.

கில்லின் கேப்டன்சி இன்னிங்ஸ்
கேப்டனாக பேட்டிங்கில் அசத்திய கில், லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில், 147 ரன்கள் எடுத்தார். 2-வது இன்னிங்சில் அரைதசம் கடந்த கில், எட்ஜ்பாஸ்டனில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 269 மற்றும் 161 ரன்கள் எடுத்து தனது பொறுப்பை நிறைவேற்றினார். டெஸ்ட் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் 2-வது நாள் வரை சென்றது மகிழ்ச்சியளிக்கிறது “இந்தியாவில் நாம் விளையாடும் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்கள் செல்வதில்லை என்று நான் கூறுவேன்.
அதிர்ஷ்டவசமாக இங்கு விளையாடும் பெரும்பாலான நாட்களில் நாங்கள் பேட்டிங் செய்கிறோம், களத்தடுப்பு செய்வதில்லை, எனவே அது எங்களுக்கு நல்லது. முதல் இன்னிங்ஸிலும், நாங்கள் சுமார் 90 ஓவர்கள் களத்தடுப்பு செய்தோம், வரவிருக்கும் போட்டிகளிலும், நாஙகள் தொடர்ந்து ரன்கள் எடுத்து 400 அல்லது 300 ரன்களைப் பதிவு செய்ய முடிந்தால், நாங்கள் எப்போதும் ஆட்டத்தில் இருப்போம்.”
குல்தீப் யாதவ் Vs வாஷிங்டன் சுந்தர்
பிட்ச்களின் தற்காப்புத் தன்மை மற்றும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் பேட்டிங் ஆதாயங்கள், நடுப்பகுதியில் சில ஆபத்துகளை உருவாக்க ஒரு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரை (wrist spinner) விளையாடுவது சிறந்ததா என்ற விவாதத்தைத் தூண்டியுள்ளது. அந்த வாய்ப்பு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்றோர் பேட்டிங் பலம் சேர்ப்பதால், விரல் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக கட்டுப்பாட்டை வழங்க முடியும் என்று கில் கூறினார்.
குல்தீப் போன்ற ஒரு பந்துவீச்சாளர் இருக்கும்போது அது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும். வாஷிங்டனை விளையாட நான் விரும்பியதற்கு ஒரு காரணம் அவர் எங்களுக்கு பேட்டிங்கில் வலிமை சேர்ப்பார். முதல் இன்னிங்ஸில், எனக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். ஏழாவது விக்கெட்டுக்கு “அந்த பார்ட்னர்ஷிப் இல்லையென்றால், எங்கள் முன்னிலை 70-80-90 ரன்களாக இருந்திருக்கும், இது 180 லிருந்து உளவியல் ரீதியாக மிகவும் வேறுபட்டது.
முன்னிலை என்பது 80 ரன்களாக இருந்திருந்தால், எதிரணிக்கு இன்னும் நெருக்கமாக இருக்கும். மேலும் நாங்கள் எதிர்பார்த்தது போலவே, 5-வது நாளிலும் கூட, பந்து நேராக திரும்பவில்லை, கரடுமுரடான பகுதிகளில் இருந்து மட்டுமே நகர்ந்தது. ஐந்தாவது நாள் விக்கெட்டில், விரல் சுழற்பந்து வீச்சாளர் எங்களுக்கு அதிக கட்டுப்பாட்டை வழங்குவார் என்று நாங்கள் நினைத்தோம் என்று கில் கூறியுள்ளார்.