
நடிகை அருணா பற்றிய கூடுதல் தகவல்கள்
Mucherla Aruna: 2025 ஜூலை 9ஆம் தேதி, அமலாக்கத்துறை அதிகாரிகள் நடிகை அருணாவின் வீட்டில் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நடிகை அருணா என்றால் யார்? 80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்கு தெரிந்த அளவிற்கு, இன்றைய தலைமுறைக்கு அவரைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ உங்களுக்காக அருணாவின் பின்னணி விபரம்:
Mucherla Aruna: நடிகை அருணா தமிழ் சினிமாவில் 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இயக்குநர் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். கிராமிய பின்னணி படங்கள், எளிமையான தோற்றம் கொண்ட கதாபாத்திரங்கள் என்றால், கண்ணை மூடிக் கொண்டு அருணாவை அங்கே ஃபிட் செய்துவிடுவார்கள் இயக்குனர்கள். விஜயகாந்த் நடித்த சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, பாக்கியராஜ் நடித்த டார்லிங் டார்லிங், கார்த்திக் உடன் கேள்வியும் நானே பதிலும் நானே , சிவாஜி கணேசன் நடித்த முதல் மரியாதை போன்ற பல படங்களில் துணை நடிகையாகவும், இரண்டாம் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். பெரும்பாலும் துணை கதாபாத்திரங்களில் நடித்தாலும், தன் தனித்துவமான தோற்றத்தால், அனைவராலும் கவரப்பட்டவர் அருணா. இதோ அவர் பற்றி கூடுதல் தகவல்களை அறியலாம்.
அருணாவின் குடும்ப வாழ்க்கை தெரியுமா?
Mucherla Aruna: நடிகை அருணா ஆந்திராவைச் சேர்ந்தவர், தற்போது சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார். அவரது கணவர் மோகன் குப்தா, வீட்டு உள்கட்டமைப்பு மற்றும் அலங்கார பணிகளை மேற்கொள்ளும் தொழிலதிபராக உள்ளார். நடிகை அருணாவின் தொழில்துறை பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. சினிமாவிலிருந்து விலகிய பிறகு, அவர் குடும்பத்துடன் சேர்ந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளார்:

கணவர் மோகன் குப்தா நடத்தும் தொழில்
Mucherla Aruna: நடிகை அருணாவின் கணவர் மோகன் குப்தா, உடற்பயிற்சி உபகரணங்கள் இறக்குமதி மற்றும் விற்பனை செய்து வருகிறார். அமெரிக்காவின் Life Fitness நிறுவனத்தின் உபகரணங்களை இந்தியாவுக்காக டீலர்ஷிப் பெற்றுள்ளார். அதை பல மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். இது தவிர பிட்னஸ் சென்டர் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரீபோக் பிட்னெஸ் சென்டர் என்ற பெயரில் சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு மையம் நடத்தி வருவதாகவும் தகவல் உள்ளது. இந்த மையத்தில் பிரபல நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
குடும்பம் சார்ந்த வியாபாரத் தகவல்கள்
Mucherla Aruna: நடிகை அருணா மற்றும் அவரது கணவர், மூத்த மகள் மற்றும் மருமகன் இணைந்து இரண்டு நிறுவனங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்களில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இது தவிர அருணா தனது வீட்டில் தோட்டம் அமைத்து, தக்காளி, வெண்டை, வாழை, டிராகன் ஃப்ரூட் போன்ற பல காய்கறிகளை வளர்த்து பராமரித்து வருகிறார். அவர் வீட்டின் தினசரி சமையலுக்கு அவற்றை பயன்படுத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. தொழில்களை கடந்து, சமைப்பது அவருக்கு மிகவும் பிடித்த விசயம் என்கிறார்கள். சினிமாவில் இருந்து அவர் ஒதுங்கிய பிறகு, பெரிய அளவில் ஊடக வெளிச்சம் இல்லாமல் இருந்த அருணா, சமீபத்திய அமலாக்த்துறை ரெய்டு மூலம், மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.