
ராமதாஸ், செல்வபெருந்தகை (image source: x)
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட பிளவால் பாமக இரண்டுபட்டு நிற்கிறது. இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த இரு அணிகளுக்கும் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார்கள்.
ஒரு பக்கம் ராமதாஸ், “நான் தான் இந்த கட்சியை உருவாக்கியவன். அதனால் என்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவேன்” என்கிறார். மற்றொருபுறம், “ஐயாவுக்கு வயதாகிவிட்டது! கடந்த 5 ஆண்டுகளாகவே ஐயா, ஐயாவாக இல்லை. பலமுறை எடுத்துச் சொல்லியும் அவர் தன்னிச்சையாகவே செயல்படுகிறார். இதனால் கட்சியை காப்பாற்றுவதற்காகவே தலைவர் பதவியை நானே எடுத்துக் கொண்டேன். பாட்டாளி மக்கள் கட்சியில் பிளவு ஏற்படுத்த திமுக சதி செய்கிறது” என்று அன்புமணி குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால், இருவரும் பிரிந்து நிற்பதற்கான அடிப்படை காரணம் கூட்டணி பிரச்சினை தான் என்று அக்கட்சியினரே கூறுகின்றனர். பாஜகவுடன் கூட்டணி அமைக்க அன்புமணி விரும்புகிறார்.
ஆனால், ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறார் என தகவல்கள் வருகிறது. இதனிடையே, ராமதாசை தைலாபுரத்தில் நேரில் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு உள்ளிட்டோர், டாக்டர் ராமதாஸின் மணிவிழாவையொட்டி மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக கூறியுள்ளனர். திமுக தலைமையிலான கூட்டணியில். பாட்டாளி மக்கள் கட்சி இணைவதற்கான சமிக்சையாகவே இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் பாமக?
திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும் என்ற கருத்து முன் வைக்கப்படும் நிலையில் ராமதாஸும், தொல்.திருமாவளவனும் பரஸ்பரம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசியல் நோக்கர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு ராமதாஸ் பேசும்போது, விசிக தலைவரும் தனது நண்பருமான தொல். திருமாவளவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்பது எனக்கு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக தொல்.திருமாவளவனின் குரல் தொடர்ந்து ஒலிப்பதாக ராமதாஸ் கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக வார பத்திரிக்கையின் சமூக வலைதள பக்கத்துக்கு தொல். திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறிய கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. “ஆரம்ப காலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் சமூக நீதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் இணைந்து போராடியுள்ளோம். அப்போதெல்லாம் ஐயா ராமதாஸ் தன் மீது தனிப்பட்ட முறையில் அக்கறையும் மரியாதையும் கொண்டிருந்தார். தைலாபுரத்தில் ராமதாஸ் அய்யாவை சந்திக்க சென்றபோது அவரது தோட்டத்தில் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை கொண்டு சமைத்த உணவை அவரே எனக்கு பரிமாறியிருக்கிறார். இந்த வயதிலும் சமூக நீதிக்காக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருபவர் ராமதாஸ்” என்று அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆக மொத்தத்தில் ராமதாசும் திருமாவளவனும் தெரிவித்துள்ள இந்த கருத்துகள் திமுக கூட்டணியில் பாமக ஒன்றிணைவதற்கான தடைகளை விலக்கி இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்த வரை அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களே பாஜகவுடன் இணைய ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால், ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி சேரவே விரும்புகிறார். அதற்கான நகர்வாகத்தான் செல்வப்பெருந்தகை, வன்னியரசு போன்றவர்கள் ராமதாசை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி சென்றுள்ளார்கள் என்று ராமதாசுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, திமுக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளதென திமுகவின் சில மூத்த நிர்வாகிகள் நமது தமிழ் நியூஸ் டைம்ஸ் செய்தியாளரிடம் கூறியுள்ளார்.
அவர்கள் மேலும் கூறியதாவது:
பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இருக்கும் கூட்டணியில் நாங்கள் இடம் பெற மாட்டோம் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் முன்பு கூறியிருந்தார். திருமாவளவனை பொருத்தவரை ராமதாஸ் மீது தனிப்பட்ட முறையில் பெரும் மரியாதை வைத்துள்ளார்.
ஒரு சில விரும்பத் தகாத செயல்களால் பாட்டாளி மக்கள் கட்சியுடனான தொடர்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி துண்டித்துக் கொண்டது. இருப்பினும் டாக்டர் ராமதாஸ் குறித்து திருமாவளவன் கடுமையான விமர்சனங்கள் எதையும் முன் வைக்கவில்லை. அவர் மீதுள்ள மரியாதை குறையவில்லை என்பதையே திருமாவளவனின் சமீபத்திய பேச்சு மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
திமுக கூட்டணியை பொறுத்தவரை 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 200 சீட்டுக்கு மேல் வெற்றி பெறுவதையே மு.க.ஸ்டாலின் இலக்காக வைத்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் சீட்டு பங்கீடு தொடர்பாக மட்டுமே கூட்டணி கட்சிகள் இடையே சில மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை நாங்கள் மறுக்கவில்லை. அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் லாவகமாக எதிர்கொண்டு சுமூகமான தேர்தல் உடன்படிக்கையை ஏற்படுத்தி தருவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதே சமயம் பாஜக உள்ள கூட்டணியில் இடம்பெற போவதில்லை என்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக உள்ளதால் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் விலகாது.
பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்பது அன்புமணி ராமதாஸின் விருப்பம். ஆனால் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி சேரவே விரும்புகிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் அன்புமணி கொடுத்த அழுத்தம் காரணமாகவே பாஜக கூட்டணியில் பாமக இடம் பெற்றிருந்தது. பாஜக கூட்டணியில் சேர்ந்ததால் பாமகவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே சமயம் அதிமுக- பாஜக கூட்டணி வலுவாக இல்லை என்பதை ராமதாஸ் உணர்ந்து இருக்கிறார்.
திமுகவுடன் கூட்டணி அமைத்தால் சீட்டுகள் சற்று குறைவாக கிடைத்தாலும் உறுதியான வெற்றியை பெற்று பாட்டாளி மக்கள் கட்சிக்கான அங்கீகாரத்தையும் அந்தஸ்தையும் நிலை நிறுத்தலாம் என்று ராம்தாஸ் கருதுகிறார்.
நடிகர் விஜய் கட்சியான தவெக முதன் முதலாக தேர்தலை சந்திக்க இருப்பதால் 2026 சட்டமன்றத் தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை அவர்கள் ஏற்படுத்துவார்கள் என்பதை கணிக்க முடியவில்லை.
ஒரு பக்கம் நாம் தமிழர் கட்சி பாஜக கூட்டணியுடன் இணைவது போன்ற தோற்றம் உள்ளது. ஒருவேளை அதிமுக பாஜக கூட்டணியில் தவெக அல்லது நாம் தமிழர் கட்சி இணைந்தால் தற்போதைய திமுக கூட்டணியின் வெற்றி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று திமுக மேலிடம் நினைக்கிறது.
இதையும் படிங்க | அரசு ஊழியர்கள் குழந்தைகளுக்கு உயர்கல்வி முன்பணம் உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு
அதுபோன்ற ஒரு சூழ்நிலையை சமாளிக்க வேண்டும் என்றால் வட மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை போன்ற வட மாவட்டங்களில் வலுவாக உள்ள பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தால் பெரிய அளவில் வெற்றியை ஈட்ட முடியும் என்று திமுக மேலிடம் கருதுகிறது. இதையே காங்கிரசும் ஆதரிக்கிறது. எனவே வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் எதிர்கட்சிகளின் சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்றால் திமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம்.
இதை கருத்தில் கொண்டே ராமதாஸ் உடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை காங்கிரசும் விடுதலை சிறுத்தைகளும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன. இதற்கு திமுகவின் ஆதரவும் பின்னணியில் உள்ளது.
200 சீட்டுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்பதை நோக்கியே திமுக கூட்டணி காய்களை நகர்த்தி வருகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.