
இஞ்சி பூண்டு விழுது
இஞ்சி பூண்டு விழுதை பதமாக அரைத்து நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் சேமித்து வைப்பது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.
இந்திய சமையலில் இஞ்சி, பூண்டு போன்ற மசாலா பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வெஜ் மற்றும் நான் வெஜ் என எந்த உணவாக இருந்தாலும் இஞ்சி பூண்டு சேர்ப்பது உணவின் மணத்தையும் ருசியையும் அதிகரிக்கிறது. சைவம் அசைவம் எந்த உணவாக இருந்தாலும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்ப்பது சமையலில் ஒரு மேஜிக் செய்கிறது என்று கூட சொல்லலாம். ஆனால் நாம் காலையில் அவசரமாக சமைக்கும் போது இஞ்சி பூண்டு விழுதை தயாரிப்பது சிரமமாக இருக்கலாம்.
நீங்கள் சமைகக்கும் நேரமும் அதிகம் ஆகும். சரி கடைகளில் விற்கும் இஞ்சி பூண்டு விழுதை பயன்படுத்தலாம் என்று நினைத்தாலும் அதன் மணமும் சுவையும் சற்று சுமாராக இருக்கும். இதனால் நீங்கள் தேவையான அளவு இஞ்சி பூண்டு விழுதை முதலிலேயே தயாரித்து பிரிட்ஜில் சேமித்து வைத்தால் சமைக்கும் வேலை எளிதாக இருக்கலாம். இஞ்சி பூண்டு விழுது கெட்டு விடும் என்ற அச்சமும் உங்களுக்கு வேண்டாம். எண்ணெய் உப்பு மஞ்சள் சேர்த்து பக்குவமாக இஞ்சி பூண்டு பேஸ்ட் எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இஞ்சி – 3/4 கப்
பூண்டு – 1 கப்
உப்பு – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – 10 டேபிள்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்முறை
நீங்கள் இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிக்கும் போது தரமான இஞ்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். முதலில் இஞ்சியை கழுவி தோல் நீக்க வேண்டும். தோல் நீக்கிய இஞ்சியை மீண்டும் ஒரு முறை கழுவி அதை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் பூண்டு பற்களை தோல் நீக்கி எடுத்து கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பினால் பூண்டை தோலுடனும் சேர்க்கலாம்.
பின்னர் மிக்ஸி ஜாரில் நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும்.
பின்னர் அதில் மஞ்சள் தூள் உப்பு மற்றும் 4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட்டை நன்றாக அரைக்க வேண்டும். பின்னர் சுத்தமாக காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் 6 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட்டை கலந்து கொள்ள வேண்டும். பின்னர் பாட்டிலை நன்றாக மூடி பிரிட்ஜில் வைக்க வேண்டும். இந்த இஞ்சி பூண்டு பேஸ்ட்டை நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். இதில் தண்ணீர் படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
தேவைப்படும் போது ஈரம் இல்லாத ஸ்பூன் பயன்படுத்தி தேவையான அளவு எடுத்து விட்டு உடனடியாக மூடி பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
மேலும் படிக்க | ‘உருளைக்கிழங்கு இல்லாத ஜெயின் சமோசா’ இனிப்பு மற்றும் புளிப்பு சட்னியுடன் சுவையே அலாதி!
நீங்கள் வெஜ் குருமா, நான் வெஜ் குருமா, பிரியாணி என எந்த உணவுகளுக்கு வேண்டுமானாலும் இந்த இஞ்சி பூண்டு விழுதை பயன்படுத்தலாம். கடைகளில் வாங்குவதை விட நீங்களே வீட்டில் பக்குவமாக அரைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சமைக்கும் போது உங்கள் உணவின் ருசி அருமையாக இருக்கும். அப்பறம் என்ன உடனே இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரித்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.